பாசனப் பகுதி நிலங்களுக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது

Tuesday, 21 July 2009 08:07 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமணி 21.07.2009

அமராவதி அணையில் உயிர்த் தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜூலை 20: புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதி நிலங்களுக்கு அமராவதி அணையில் இருந்து திங்கள்கிழமை காலை 7 மணிக்கு உயிர்த் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் சுமார் 25 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. கொள்ளளவு 4032 மில்லியன் கனஅடி. கோவை, ஈரோடு, கரூர் வரையிலான மூன்று மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுகளான சுமார் 55 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள், இந்த அணை மூலம் பாசன வசதி பெற்றுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோரக் கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மே மாதம் வரை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணை முற்றிலும் வறண்டது. இதனால் கரையோரக் கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.

இந் நிலையில், ஜூன் முதல் வாரத்தில் துவங்கிய தென் மேற்குப் பருவமழையால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு ஜூன் 11-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் அமராவதி ஆற்றில் இருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே உடுமலை மற்றும் தாராபுரம் வட்டத்தில் உள்ள புதிய ஆயக்கட்டு நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கரும்புக்கு உயிர்த் தண்ணீர் விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று அமராவதி அணையின் பிரதான கால்வாயில் இருந்து புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு 14 நாட்களுக்கு உயிர்த் தண்ணீர் திறந்து விட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் 440 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 14 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும். இதன் மூலம் உடுமலை மற்றும் தாராபுரம் வட்டத்தில் புதிய ஆயக்கட்டு பகுதியில் உள்ள சுமார் 25 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.18 அடியாக இருந்தது. பிரதான கால்வாயில் இருந்து 440 கனஅடியும், அமராவதி ஆற்றில் 300 கனஅடியும், கல்லாபுரம் வாய்க்காலில் 20 கனஅடியும், ராமகுளம் வாய்க்காலில் 20 கனஅடியும் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்தது. ஆயிரத்து 972 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.