நதிகளை இணைத்தால் இந்தியா தன்னிறைவு பெறும்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய இயக்குநர்

Friday, 19 March 2010 10:45 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமணி 19.03.2010

நதிகளை இணைத்தால் இந்தியா தன்னிறைவு பெறும்: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மைய இயக்குநர்


திருநெல்வேலி, மார்ச் 18: நதிகளை இணைத்தால் இந்தியா தன்னிறைவு பெறும் என சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆர். மரிய சலத் தெரிவித்தார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை சார்பாக தேசிய நதிநீர் இணைப்பு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு பல்கலைக்கழக பதிவாளர் ச. மாணிக்கம் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஜே. சாக்ரட்டீஸ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மரிய சலத், மேலும் பேசியதாவது:

நமது நாடு நீர் வளம் பருவ மழையையும், நிலத்தடி நீரையும் நம்பியே உள்ளது. இதில் நிலத்தடி நீர் பருவமழையைப் பொருத்தே இருக்கிறது. ஆனால் பருவமழை அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியாகப் பெய்வதில்லை. அனைத்துப் பகுதிகளிலும் வெவ்வேறு அளவுகளில் பெய்கிறது. உதாரணமாக ராஜஸ்தானில் ஆண்டுக்கு 130 மில்லி மீட்டர் அளவு மழை பெய்கிறது. சிரபுஞ்சியில் 11,000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இதனால் வேளாண்மை போதுமான அளவுக்கு நடைபெறுவதில்லை. சீரான தண்ணீர் விநியோகம் இருந்தால்தான் விவசாயம் நன்றாக நடைபெறும். அப்போது தான் உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைய முடியும்.

தற்போதுள்ள நிலைமைப்படி இந்தியாவில் ஆண்டுக்கு 4 ஆயிரம் பில்லியன் கன மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இப்போது 1953 பில்லியன் கன மீட்டர் மழையே பெய்கிறது. இதில் 1,122 பில்லியன் கன மீட்டர் மழை நீரையே நாம் பயன்படுத்த முடிகிறது.

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்றார்போலவும், பொருளாதார முன்னேற்றம், தொழில் வளத்தைப் பெருக்க தண்ணீர் மிகவும் அவசியம். ஆனால் இதற்குத் தேவையான தண்ணீர் இப்போதே இல்லாமல் இருக்கும்போது, எதிர்காலத்தில் இதைவிட கடினமான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

2009 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை, மத்திய பருவத்தில் 24 சதவிகிதம் குறைவாக பெய்தது. இறுதி நேரத்தில் அதிகமாக பெய்தது. இதன் காரணமாக நாட்டில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன, சில இடங்களில் முழுமையாக பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இதனால் வேளாண்மை உற்பத்தி பொருள் பெருமளவு குறைந்தது. 2008 - 2009 ஆம் ஆண்டு உணவு பொருள்கள் 12 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது. இப் பொருள்கள் 2009 - 2010 ஆம் ஆண்டு 18 மில்லியன் உற்பத்தி செய்யப்பட வேண்டும். நாட்டின் வேளாண்மைத்துறை வளர்ச்சி நிர்ணயிக்கப்படும் இலக்கை விட, 2 சதவிகிதம் குறைவாகவே உள்ளது.

நாட்டில் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக தண்ணீர் வினியோகம் இருந்து, உணவு உற்பத்தி தேவையானளவுக்கு இருந்தால்தான் மக்கள் நலமுடன் வாழ முடியும். தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு, இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2002 ஆம் ஆண்டு கூறியது.

நதிநீர் இணப்புத் திட்டம் உலகிலேயும்,மனித வரலாற்றிலும் மிகப்பெரிய திட்டமாகும். இத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான 10 நதிகள் இணைக்கப்படும். மேலும் இமயமலையில் உற்பத்தியாகி வரும் 37 கிளை நதிகள் இணைக்கப்படும். இதற்காக பல்வேறு இடங்களில் 3 ஆயிரம் தடுப்பணைகள் அமைக்கப்படும். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக 12,500 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் அமைக்கப்படும்.

இத் திட்டத்தின் மூலம் மிகப்பெரிய நீர்வளத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பெற முடியும். இத் திட்டத்தில் 178 பில்லியன் கன லிட்டர் தண்ணீர் எடுத்துச் செல்லலாம். திட்டத்தை நிறைவேற்ற 5 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இத் திட்டத்தின் மூலம் 35 ஜிகா வாட்ஸ் மின்சாரம் பெறலாம். மேலும் இதனால் 35 மில்லியன் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும்.

நதிகளை இணைத்தால், உணவு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் இந்தியா தன்னிறைவு பெறும். தற்போதுள்ளபோல உணவு பொருள்களை இறக்குமதி செய்யும் நிலை, எந்தச் சூழ்நிலையிலும் ஏற்படாது.

சில மாநில அரசுகள் நதி நீர் இணைப்புத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒத்துழைப்பு தர மறுத்து வருகின்றன. அம் மாநில அரசுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார் மரிய சலத்.

சென்னை பல்கலைக்கழக பொருளாதாரத்துறைத் தலைவர் என். ராஜலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சி. ஜெசிந்தா ஜெயக்குமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

பொருளாதாரத் துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 19 March 2010 10:47