11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 4 %வேளாண் வளர்ச்சி உறுதி: சரத் பவார்

Saturday, 07 November 2009 10:51 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமணி 07.11.2009

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 4 %வேளாண் வளர்ச்சி உறுதி: சரத் பவார்

கோவை, நவ. 6: 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண் துறையில் 4 சதவீத வளர்ச்சி எட்டப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் உறுதியளித்தார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தேசிய வேளாண் விஞ்ஞானிகள் மாநாட்டை வெள்ளிக்கிழமை துவக்கிவைத்து அவர் பேசியது:

வேளாண் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. குறிப்பாக கரும்பு மற்றும் தேங்காய் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. நெல், நிலக்கடலை, எள், உளுந்து, பாசிப்பயறு ஆகிய உணவு தானியங்களில் நாட்டின் சராசரி விளைச்சலைவிட, தமிழகத்தில் விளைச்சல் அதிகம். மாநில வேளாண் அதிகாரிகள், விவசாயிகளின் உழைப்புதான் இதற்கு முக்கிய காரணம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் வேளாண் துறையின் பங்கு 18 சதவீதமாக இருந்தது. 2008-ம் ஆண்டில் இது 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது. 1972-ல் 55.1 கோடியாக இருந்த இந்திய மக்கள்தொகை, 2007-ல் 112.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், உணவுப்பொருட்களின் தேவை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

புதிய திட்டம்: கடந்த ஆண்டு அதிகபட்சமாக உணவு தானிய உற்பத்தி 234 மில்லியன் டன்னாக இருந்தது. 2020-21-ம் ஆண்டில் இது 281.1 டன்னாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

நீர்வளம், நிலவளம் பாதிக்கப்படுவது முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மழைக் காலத்தில் வெய்யில் அடிக்கிறது, கோடை காலத்தில் மழை பெய்கிறது. இதனால், வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்காக ரூ.25 ஆயிரம் கோடியில் "ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா' திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. நெல், கோதுமை, பயறுகள் ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க ரூ.5 ஆயிரம் கோடியில் தேசிய உணவுப் பாதுகாப்பு கொள்கைத் திட்டமும் செயல்படுத்தப்படும்.

4 சதவீதமாக.. வேளாண் வளர்ச்சியை மேலும் 4 சதவீதமாக உயர்த்தும் வகையில் 11-வது ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை, மண் வளம் உள்ளிட்டவற்றின் மீது கவனம் செலுத்தி வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள 569 வேளாண் அறிவியல் நிலையங்களில் ரூ.391.24 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படும். மேலும் கூடுதலாக 15 வேளாண் அறிவியல் நிலையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 192 வேளாண் அறிவியல் நிலையங்கள், 8 மண்டல ஆராய்ச்சி இயக்குநர் அலுவலகங்கள் மின்ஆளுமை மூலம் விரைவில் இணைக்கப்படும் என்றார் பவார்.