அனைத்து மாநகராட்சிகளிலும் பண்ணை பசுமை அங்காடிகள்

Monday, 10 November 2014 07:19 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print
தினமணி       10.11.2014

அனைத்து மாநகராட்சிகளிலும் பண்ணை பசுமை அங்காடிகள்

தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் கூட்டுறவுத்துறை சார்பில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறக்கப்படும், என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி, ஆரப்பாளையம், சுந்தர்ராஜபுரம் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறை சார்பில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டுறவு அங்காடிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியது:

மக்களுக்கு கடைகளில் விற்பனை செய்வதை விட காய்கறிகள் கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாகவும், தினமும் பசுமையாகவும் கிடைக்கும் வகையில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளைத் திறக்க, சில மாதங்களுக்கு முன்பே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அவரது ஆலோசனையின்படி, கோவை மாநகராட்சி பகுதியில் முதல்கட்டமாக 10 அங்காடிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, மதுரை மாநகராட்சி பகுதியில் தற்போது 3 அங்காடிகள் திறக்கப் பட்டுள்ளன. விரைவில் மேலும் 7 இடங்களில் இந்த அங்காடிகள் திறக்கப்படும். அங்காடிகளுக்கு தினமும் ஊட்டி, கொடைக்கானல் பகுதியிலிருந்து உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற ஆங்கில வகை காய்கறிகளும் நாட்டுத் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட மற்ற அனைத்துக் காய்கறிகளும் தினமும் விவசாயிகளிடம் அதிகாலையில் அந்தந்தப் பகுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அங்காடிகளுக்கு வாகனம் மூலம் வழங்கப்படும்.

அங்காடிகளில் தினமும் காலை 8 மணி முதல் விற்பனை செய்யப்படும். விலைப்பட்டியல் அங்காடி முகப்பில் வைக்கப்படும். இந்த அங்காடிகளை தினமும் வேளாண்மைத்துறை கள அலுவலர்கள், கூட்டுறவுத்துறை துணைப்ó பதிவாளர், ஆட்சியரால் நியமிக்கப்படும் அலுவலர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து விலைப்பட்டியலையும் கண்காணிப்பர்.

அங்காடிகளில் வாடி, வதங்கிய காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது, பசுமை மாறாமல் விற்பனை செய்ய வேண்டும் என அங்காடி பொறுப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, கழிவு மான்யம் 10 சதவீதத்தை அரசின் விலைக்கட்டுப்பாடு பிரிவிலிருந்து வழங்குவதற்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் அடுத்தவாரமும், படிப்படியாக மற்ற மாநகராட்சி பகுதிகளிலும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறக்கப்படும். இதன் பிறகு, நகராட்சி, தாலுகா பகுதிகளிலுóம் இந்த அங்காடிகள் திறக்கப்படும் என்றார்.