கோவை அருகே பேரூராட்சியில் மண்புழு உரத்தில் விளைந்த காய்கறிகள்

Tuesday, 16 November 2010 05:49 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினகரன்                16.11.2010

கோவை அருகே பேரூராட்சியில் மண்புழு உரத்தில் விளைந்த காய்கறிகள்

பெ.நா.பாளையம், நவ. 16: கோவை அருகே பேரூராட்சியில் மண்புழு உரத்தில் விளைந்த காய்கறிகளை பொதுமக்களே தோட்டத்தில் சென்று பறித்துக்கொள்ளும் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்டம் கூடலூர் கவுண்டம் பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் கூறியதாவது:

பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் மூலம் மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மையத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கத்தரி, வெண்டை, முள்ளங்கி, காலிபிளவர், பச்சை மிளகாய், நூல்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு நாங்கள் தயாரித்த இயற்கை உரமான மண் புழு உரம் போடப்படுவதால், செடிகள் செழிப்பாகவும், காய்கள் புஷ்டியாகவும் உற்பத்தியாகின்றன. தீங்கு விளைவிக்காத இந்த காய்கறிகளை பொதுமக்கள் நேரிடையாக தோட்டத்தில் சென்று பறித்து கொள்ளலாம். அவற்றை, சுய உதவிக்குழுவினர் எடைபோட்டு தருவார்கள். குறைந்த விலையில் இவற்றை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

இந்த மையம் தினமும் காலை 7 மணி முதல் இயங்கும். இம்முறையால் பொதுமக்கள் காய்கறிகளை சேதப்படுத்தும் வாய்ப்பு குறைவாகும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம்முறை மாவட்டத்திலேயே முதன்முறையாக கூடலூர் கவுண்டம் பாளையம் பேரூராட்சியில் தான் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு கல்யாணசுந்தரம் கூறினார்.

கோவை அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள உள்ள காய்கறிகளில் தங்களுக்குத் தேவையானதை பெண்கள் பறிக்கின்றனர்.

தோட்டத்தில் மக்களே பறிக்கலாம்