"மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர செப். 9 இறுதி நாள்'

Thursday, 19 August 2010 10:44 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமணி 19.08.2010

"மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர செப். 9 இறுதி நாள்'

தஞ்சாவூர், ஆக. 18: செப். 9-ம் தேதிக்குள் மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவன தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. பழனியப்பன் விடுத்த செய்திக் குறிப்பு:

காப்பீட்டு நிறுவனம் சம்பா-தாளடி பட்டத்தில் மழைக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 418 விவசாயிகள் பங்கேற்று ரூ. 8 லட்சம் பிரிமியம் செலுத்தி ரூ. 28 லட்சம் இழப்பீட்டுத் தொகை பெற்றனர்.

இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் அதன் எல்லையில் நிறுவப்பட்டுள்ள மழை மானியில் குறிப்பிட்ட காலத்தில் பெய்கிற மழையளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 25 முதல் டிசம்பர் இறுதி வரை உள்ள காலத்தில் விதைப்பு, பயிர் வளர்ச்சி, முதிர்ச்சி, அறுவடை ஆகிய பருவங்களில் ஒவ்வொரு பருவத்திலும் சாதாரணமாக பெய்ய வேண்டிய மழை அளவை வைத்து, அதற்கு குறைவாகப் பெய்திருந்தால் குறைகின்ற ஒவ்வொரு மில்லி மீட்டருக்கும் தொகை கணக்கிடப்படும்.

அதேபோல, செப்டம்பர் முதல் பிப். 10 வரை பெய்திருக்க வேண்டிய மழை அளவைவிட, கூடுதலாக பெய்திருந்தால் அதற்கும் இழப்பீடு கணக்கிடப்படும். இதுதவிர, செப்டம்பர் முதல் நவம்பர் வரை தொடர் வறட்சி தென்பட்டால் அதற்கும் இழப்பீடு கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் சேர இதற்காக நியமிக்கப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார முகவர்கள் வாயிலாக மட்டுமே பிரிமியம் பெறப்படும்.

பிரிமியம் தொகை: தஞ்சை, திருவையாறு ரூ| 552, பூதலூர் | ரூ607, பாபநாசம், திருப்பனந்தாள், பட்டுக்கோட்டை |ரூ 474, திருவிடைமருதூர், கும்பகோணம் ரூ| 430, அம்மாப்பேட்டை | ரூ552, ஒரத்தநாடு, திருவோணம் ரூ| 529, மதுக்கூர் ரூ| 458, பேராவூரணி, சேதுபவாசத்திரம் ரூ| 629. இதற்கான விண்ணப்பப் படிவங்களை முகவர்களிடம் பெற்று, நிறைவு செய்து கணினி சிட்டா அல்லது சிட்டா அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து பிரிமியத் தொகையை அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், சென்னை என வரைவோலையாக எடுத்து முகவர்களிடம் தர வேண்டும். முகவர்களின் தொடர்பு எண்களைப் பெற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ. பழனியப்பனை 94437 80661 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.