5 குளிர்பதனக் கிடங்கு அமைக்க அரசு திட்டம்

Monday, 27 July 2009 07:09 administrator நாளிதழ்௧ள் - வேளாண்மை
Print

தினமணி 27.07.2009

5 குளிர்பதனக் கிடங்கு அமைக்க அரசு திட்டம்

சென்னை, ஜூலை 25: தமிழக அரசு சார்பில் தேனி, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன என்று வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கூட்டமைப்பு ஆகியன சார்பில் உணவுப் பொருள்கள் பதப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்தியத் தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருமான துரைசாமி வரவேற்றார்.

தமிழக வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் பேசியது:

உணவுப்பொருள் பற்றாக்குறை... தமிழத்தில் உள்ள 6.61 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 103.40 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் தேவைப்படுகிறன. ஆனால் 91.11 லட்சம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள்தான் கிடைக்கின்றன. மொத்தத் தேவையில் 12.29 லட்சம் மெட்ரிக் டன் பற்றாக்குறையாக உள்ளது.

அரிசி மொத்தத் தேவை 74.7 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் 64.61 லட்சம் மெட்ரிக் டன் தான் உற்பத்தியாகிறது.

சேதாரம் எவ்வளவு...? பழம், காய், மலர் ஆகியன மொத்தம் 10.06 ஹெக்டேர் நிலத்தில் 105.77 லட்சம் மெட்ரிக் டன் சாகுபடியாகிறது. தானிய வகைகளில் அறுவடைக்கு முன், பின் ஏற்படும் சேதார மதிப்பு மொத்த உற்பத்தியில் 10 முதல் 20 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே போல் காய், பழம் ஆகியவற்றில் 30 முதல் 35 சதவீதம் சேதாரமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு நவீன முறையில் அறுவடை செய்தல் மற்றும் பதப்படுத்தல் முறையைக் கடைபிடிக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

விளை பொருள்களுக்கு விலை கிடைக்க... விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க அந்தப் பொருள்களை இருப்பு வைக்க 277 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.

இங்கு விவசாயிகளின் விளைபொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. விவசாயிகள் தொடர்ந்து சாகுபடியில் ஈடுபடும் வகையில், இருப்பு உள்ள பொருள்களின் மதிப்பில் 75 சதவீதம் பணம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6 மாதம் கழித்து அந்த விளை பொருள்கள் உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தரப்படுகிறது.

வேளாண் விளைபொருள்களைப் பாதுகாக்கும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க முன்வருபவர்களுக்கு முதல் ஆண்டில் 30 சதவீதம், 2-ம் ஆண்டுல் 20 சதவீதம், 3-ம் ஆண்டுல் 10 சதவீதம் மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

ஏற்றுமதியை அதிகரிக்க... விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய நடுத்தர, சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் ரூ. 5 ஆயிரம் சான்றுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நிறுவனங்களுக்கு ரூ. 25 ஆயிரம் கட்டணம் விதிக்கப்பட்டது. இந்தக் கட்டணம் இப்போது சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 500, நடுத்தர விவசாயிகளுக்கு ரூ.1000, கம்பெனிகளுக்கு ரூ.5000 என குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு 5244-ஆக இருந்த ஏற்றுமதிச் சான்று பெற்றவர்களின் எண்ணிக்கை இப்போது 25,047-ஆக அதிகரித்துள்ளது.

இதனால் ஏற்றுமதிக் கட்டணச் சான்று பெற்ற பிறகு ஏற்றுமதி செய்யமுடியாமல் போனால் ஏற்படும் நஷ்டம் குறையும் என்பதால் இப்போது அதிகமானோர் ஏற்றுமதிச் சான்றிதழ் பெற்று வருகின்றனர்.

குளிர்பதனக் கிடங்கு... தேனிமாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சை, கோவை மாவட்டம் பொங்கலூரில் வெங்காயம், கிருஷ்ணகிரியில் மாம்பழம், ஓசூரில் தக்காளி, பட்டுக்கோட்டையில் தேங்காய் குளிர்பதனக் கிடங்கு அமைக்க தனியாருக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு அதிக முதலீடு தேவைப்படும் என்பதால் இதை அமைக்க தனியார் யாரும் முன்வரவில்லை. எனவே இதைத் தமிழக அரசே செயல்படுத்த முடிவு செய்துள்ளது' என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.

உணவு பாதுகாப்பு தலைவர் சுனில்குப்தா, தமிழக வேளாண் விற்பனை வாரிய ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் முன்னதாகப் பேசினர்.