அனுமதி பெறாமல் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் கட்டிய கட்டடம்: அகற்ற மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

Friday, 14 April 2017 00:00 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print
தினமணி         14.04.2017          

அனுமதி பெறாமல் ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் கட்டிய கட்டடம்: அகற்ற மாநகராட்சி பிறப்பித்த நோட்டீஸ் செல்லும்

ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் திட்ட அனுமதி பெறாமல்  கட்டடப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை அகற்றுவதற்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பொன் விழா நகரைச் சேர்ந்தவர் ஷபிதா பானு. இவர், கடந்த 2010-ஆம் ஆண்டு முருகேசன் என்பவரிடம் இருந்து 1,040 சதுர அடி நிலத்தை வாங்கி, மூன்று மாடி கொண்ட கட்டடம் கட்டியுள்ளார்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் ஐசிஎஃப்.க்குச் சொந்தமானது எனக்கூறி, அதன் தலைமை பொறியாளர், கட்டடத்தை காலி செய்யும்படி கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷபிதா பானு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் வரைபட அனுமதியை சமர்பிக்குமாறு, மனுதாரருக்கு சென்னை மாநகராட்சி -நோட்டீஸ்- அனுப்பியது.

ஆனால், கட்டடத்தை வரன்முறைப்படுத்தக்கோரி மாநகராட்சிக்கு அவர் விண்ணப்பித்தார். இதையடுத்து, அந்த கட்டடத்தை அகற்றும்படி மாநகராட்சி -நோட்டீஸ்- அனுப்பியது. இதை எதிர்த்து ஷபிதா பானு தாக்கல் செய்த மனுவை விசாரித்தத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட நிலமானது,

இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலைக்குச் சொந்தமானது என்பதும், திட்ட அனுமதி இல்லாமல் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு ஆவண ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. ஆகையால், மனுதாரருக்கு எந்தவித சலுகையும் வழங்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.