மழைநீர் சேகரிப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தல்

Thursday, 20 June 2013 07:27 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினமணி             20.06.2013 

மழைநீர் சேகரிப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆணையர் மா.அசோகன் உத்தரவிட்டார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகளை தீவிரப்படுத்த, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

மாநகராட்சி அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான மாதிரிகள் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் மழை நீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்.

மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பகுதியில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வார்டு அலுவலக உதவி ஆணையர்கள் தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அடங்கிய குழுவை அமைத்து, தெருப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு, சர்வே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகளை அழைத்து மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய் வரிவசூல் செய்யும் வாகனங்கள்கள், திரையரங்குகள் ஆகியவற்றின் மூலம் மழைநீர் சேகரிப்பது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்.

மக்கள் கூடும் பொது இடங்களில் நாடக நடிகர்கள், கலைக் குழுவினர் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் வடிகால் சரியான அளவில் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.

புதிதாக கட்டடம் கட்டுபவர்கள் கட்டட வரை படத்துடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் சேர்த்து, வரைபடம் ஒப்புதல் பெறுவதோடு, மாநகராட்சி அலுவலர்கள் அதை ஆய்வு செய்த பின்னரே குடிநீர் இணைப்பு மற்றும் வரி விதிப்பு செய்யப்பட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மழைநீர் சேகரிப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.