தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் கலெக்டர் ஆஷிஷ்குமார் தகவல்

Tuesday, 18 June 2013 08:36 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினத்தந்தி                18.06.2013 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் கலெக்டர் ஆஷிஷ்குமார் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.

சுரங்கப்பாதை

கோவில்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நாளை தொடங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியை செய்கிறது. அந்த பகுதி மக்கள் மாற்றுப்பாதை கேட்டு உள்ளனர். தற்போது மூப்பன்பட்டி கண்மாய் வழியாக மாற்றுப்பாதைக்கு இடம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

3 மாதத்தில் ரெயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைத்து இருசக்கர வாகனங்கள் செல்ல வசதி செய்து கொடுக்கப்படும். பணிகளை விரைந்து செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசின் கீழ் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளும் உள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தில் 5 முதல் 10 சதவீதம் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. வி.இ.ரோடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணி நடப்பதில் சிரமம் இருந்தது. இது தொடர்பாக வாரிய தலைவரிடம் கூடுதல் ஆட்கள் நியமித்து பணிகளை விரைந்து முடிக்க கேட்டு உள்ளோம். பணிகள் விரைவில் முடிக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புதிதாக டெண்டர் விடப்பட உள்ளது.

நோட்டீசு

ஸ்பிக் நிறுவனத்துக்கு தேவையான மூலப்பொருளான நாப்தா, ஒரு வாரத்துக்குள் வந்து விடும். அந்த ஆலை இயங்கியதும், டாக் நிறுவனமும் இயங்க தொடங்கும். சம்பளம் கொடுக்கவில்லை என்று புகார் மனு கொடுத்து இருந்தனர். அது தொடர்பாக தொழிற்சாலைகள் ஆய்வாளர், ஆலைக்கு நோட்டீசு கொடுத்து உள்ளார். மேலும் ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை.இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒருவருக்கு தையல் இயந்திரம், 6 பேருக்கு வன்கொடுமை தீருதவியாக ரூ.3 லட்சத்து 15 ஆயிரம், நலிந்தோர் நலத்திட்ட உதவியாக 11 பேருக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் உலமாக நலநிதி மூலம் ஒருவருக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.6 ஆயிரம், ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அமிர்தஜோதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரபாண்டியன், ஆதிதிவிராடர் நலத்துறை அலுவலர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.