பம்மல் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Tuesday, 18 June 2013 06:46 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print

தினமணி               18.06.2013

பம்மல் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பம்மல் நகராட்சியில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்தும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பேரணிக்கு பம்மல் நகர்மன்றத் தலைவர் சி.வி.இளங்கோவன் தலைமை வகித்தார். இந்தப் பேரணியில் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் முக்கியச் சாலைகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர் பம்மல் நகர்மன்றத் தலைவர் சி.வி.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியது: மழைநீர் சேகரிப்பின் மூலம் கிடைக்கும் பயன்களைக் கருத்தில் கொண்டு, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தமிழகத்தில் முதன் முதலாக செயல்படுத்தியவர் ஜெயலலிதா ஆவார்.

தமிழக முதல்வரின் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

புதிதாக கட்டட அனுமதி பெற, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு அமைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

வீடுகள்,வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை மறு ஆய்வு செய்த பிறகு, சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்புக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பம்மல் நகராட்சியில் வீடுவீடாகச் சென்று இவற்றை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

பம்மல் நகராட்சி ஆணையர் பி.வி.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பி.அப்பு வெங்கடேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.