மாநகராட்சியில் அம்மா திட்ட உணவகம்ரூ.61 லட்சத்தில் கட்டுமான பணி துரிதம்

Wednesday, 15 May 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - நகர்ப்புற திட்டமிடுதல்
Print
தினமலர்        15.05.2013

மாநகராட்சியில் அம்மா திட்ட உணவகம்ரூ.61 லட்சத்தில் கட்டுமான பணி துரிதம்


ஈரோடு: தமிழக முதல்வரின் "அம்மா' திட்டத்தின் கீழாக, குறைந்த விலையில் உணவு வழங்க, ஆர்.என்.பாளையம், கொல்லம்பாளையம் பகுதியில், 61 லட்சத்தில் கட்டுமான பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் உணவகம் திறக்கப்பட உள்ளது.சென்னை மாநகராட்சியில் குறைந்த விலையில் உணவு வழங்கும் நோக்கில், அம்மா திட்டத்தின் கீழாக, அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. இட்லி ஒரு ரூபாய், கலவை சாதங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல்வர் துவக்கிவைத்த திட்டத்துக்கு, சென்னை மாநகராட்சியில் மக்களிடையே பெறும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தமிழகம் முழுவதுமாக மாநகராட்சிகளில் துவக்க உத்தரவிட்டார்.ஈரோடு மாநகராட்சியில் அம்மா திட்ட உணவகங்கள் அமைக்க முடிவு செய்து, முதற்கட்டமாக மண்டலங்கள் தோறும் ஒரு உணவகம் திறக்க, ஆர்.என்.புதூர், வீரப்பன்சத்திரம், காந்திஜி ரோடு, கொல்லம்பாளையம் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.

இதனை அடுத்து கொல்லம்பாளையம் லோட்டஸ் மருத்துவமனை, சூரியம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட ஆர்.என்.புதூர் ஆகிய, இரண்டு இடங்களில், 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவகத்துக்கான கட்டிடங்கள் கட்டும் பணிகளை துவக்கியுள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் ஆறுமுகம் கூறியதாவது:ஈரோடு மாநகராட்சியில் முதல்வரின் அம்மா திட்ட உணவகங்கள், முதற்கட்டமாக இரண்டு இடங்களில் துவக்கப்படுகிறது. கொல்லம்பாளையத்தில், 18 லட்சத்திலும், ஆர்.என்.புதூரில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது.உணவுகள் சமைப்பதற்கு தலா, 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. கட்டிடம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள், 15 நாட்களில் முடித்து ஒப்படைக்கப்படும். முதல்வர் அவர்கள் திறந்து வைப்பார்கள். வ.உ.சி., பூங்கா வளாகம், காந்திஜி ரோடு ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும், எனக்கூறினார்.