குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படாது: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் உறுதி

Saturday, 01 February 2014 10:55 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமணி             01.02.2014

குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படாது: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் உறுதி

சேலம் செட்டிச்சாவடி கிராமத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் வெளியே குப்பைகளைக் கொட்டி வைக்கப் போவதில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் வெள்ளிக்கிழமை உறுதி அளித்தது.

 செட்டிச்சாவடி பகுதியில் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் கடந்த சில வாரங்களாக பணிகளை நிறுத்தியிருந்தது.

இதனால், மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நிறுவனத்துக்கு வெளியே கொட்டப்பட்டன. இதையடுத்து, நிறுவனத்தை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வியாழக்கிழமை முதல் குப்பைகளை அரைத்து தரம் பிரிக்கும் பணி தொடங்கியது. ஆனால், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் செட்டிச்சாவடியில் திரண்ட பொதுமக்கள், மாநகராட்சிக் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது என்று வலியுறுத்தினர்.

வெளியில் கொட்டப்பட்டுள்ளக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதைக் கண்காணிக்க கிராமக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அஸ்தம்பட்டி உதவிக் காவல் ஆணையர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன் தலைமையில் அதிகாரிகளும் விரைந்தனர்.

இதையடுத்து, நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.