பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க கரசேவை சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் பங்கேற்பு

Sunday, 19 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமலர்              19.01.2014

பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க கரசேவை சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் பங்கேற்பு

திருப்பூர் : "தினமலர்' நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி எதிரொலியாக, வள்ளலார் நகர் மற்றும் திருக்குமரன் நகர் பகுதிகளில் பரவிக்கிடந்த பாலிதீன் காகிதங்களை, சத்ய சாயி சேவா நிறுவனத்தினர் நேற்று அப்புறப்படுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தினமும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. வள்ளலார் நகர் பாறைக்குழியை சுற்றியுள்ள பகுதிகளில், பாலிதீன் கவர்கள் பரவிக்கிடக்கின்றன.

மாநகராட்சி 52வது வார்டில் பரவிக்கிடக்கும் குப்பையால், மழை பெய்தாலும், நிலத்தடி நீர் சேகரமாவது தடுக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பாலிதீன் குப்பையை அகற்ற வேண்டும் என, கடந்த 4ம் தேதி, "தினமலர்' நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது.

சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்தும் சேவை கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர்கள் மூலமாக, பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

திருப்பூர் சத்ய சாயி சேவா நிறுவனங்களை சேர்ந்த 80 பேர், இரண்டு குழுக்களாக பிரிந்து, நேற்று, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.

வள்ளலார் நகர் மற்றும் திருக்குமரன் நகர் சுற்றுப்பகுதிகளில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலியிடங்களில் பரவிக்கிடந்த பாலிதீன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

காலை 9.00 மணி முதல், மதியம் 1.00 மணி வரை சேகரிக்கப்பட்ட கழிவுகள், மூட்டையாக கட்டப்பட்டு, பிளாஸ்டிக் ரோடு பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.