பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு

Friday, 22 November 2013 09:23 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமணி        22.11.2013

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்புக்காக திருவொற்றியூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கு அரை கிராம் தங்க நாணயத்தை சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலக் குழுத் தலைவர் மு.தனரமேஷ் புதன்கிழமை வழங்கினார்.

மக்காத குப்பையைத் தனியாகப் பிரித்தெடுப்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படும்போது டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்தவுடன் குலுக்கல் போட்டிகளை நடத்தி முதலில் தேர்வு செய்யப்படும் அதிஷ்டசாலிக்கு அரை கிராம் தங்க நாணயமும் அடுத்து தேர்வாகும் ஐந்து நபர்களுக்கு கடிகாரமும் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து திருவொற்றியூர் மண்டலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து வழங்கும் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த மண்டலத்தில் 500 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டதையடுத்து குலுக்கல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் டி.எஸ்.கோபால் நகரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் தேர்வானார்.

இவருக்கு அரை கிராம் தங்க நாணையத்தை மண்டலக் குழுத் தலைவர் மு.தனரமேஷ் வழங்கினார். மேலும் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடிகாரங்களையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் காங்கேயம் கென்னடி, மாமன்ற உறுப்பினர்கள் அமல்ராஜ், சூர்யபாபு, நாகம்மாள், ஜெபராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.