குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி

Tuesday, 28 July 2009 06:29 administrator நாளிதழ்௧ள் - திடக்௧ழிவு மேலாண்மை
Print

தினமணி 28.07.2009

குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பயிற்சி

குளித்தலை, ஜூலை 27: குளித்தலை நகராட்சியில் சமுதாயம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து குளித்தலை நகராட்சி மற்றும் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக்குழு பெண்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

முகாமிற்கு நகர்மன்றத் தலைவர் அ. அமுதவேல் தலைமை வகித்து விளக்கமளித்தார். குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த ஜூன் 5-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் குப்பைகளை மக்கும், மக்காத குப்பையெனத் தரம் பிரித்து, அவற்றின் மூலம் உரம் தயாரிக்க முதல்கட்டமாக நகராட்சியிலுள்ள 3 வார்டு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டது.

வீடுகளுக்கு 2 குப்பைக் கூடைகள் வழங்கி மக்கும், மக்காத குப்பைகள் எதுவென்று பொதுமக்கள் தெரிந்து கொள்ள நகராட்சி மூலம் குறிப்புகள் அடங்கிய அட்டை வழங்கப்பட்டது. தற்போது, மேலும் 9 வார்டுகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வார்டு பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்களுக்கு இத்திட்டம் குறித்து பயிற்சி முகாமில் விளக்கமளிக்கப்பட்டது.

சுமார் 250 பெண்கள் பங்கேற்ற இம்முகாம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது. இந்தத் திட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்க முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு மண்புழு உரம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் ஜி. தேவிகா, புருஷோத்தமன், . ரம்யாரேகா, பி. ராமலிங்கம், எம். ரமணிமுருகன், பி. ஆன்ந்தகுமார், உசேன்கான், து.அண்ணாத்துரை, ஆர்.மாணிக்கம், எஸ்னோரா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் பி.விஜய்ஆனந்த், வி.கணபதி, கே.மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் மு.செல்வராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வேலியப்பன் நன்றி கூறினார்.