கோவையில் பெருநகரவளர்ச்சி குழுமம் அமைக்க முயற்சி

Wednesday, 21 April 2010 09:23 administrator நாளிதழ்௧ள் - பெ௫ந்திட்டம்
Print

தினமணி 21.04.2010

கோவையில் பெருநகரவளர்ச்சி குழுமம் அமைக்க முயற்சி

கோவை, ஏப். 17: சென்னையைப் போல, கோவை, மதுரை, திருச்சியில் பெருநகர வளர்ச்சி குழுமங்கள் இந்த ஆண்டிலேயே உருவாக்க முழுமுயற்சி எடுக்கப்படும் என்று, இந்திய கட்டுமானர்கள் சங்கத்தின் (பிஏஐ) மாநில அமைப்பு தலைவர் கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுவையை உள்ளடக்கிய பிஏஐ மாநில அமைப்பின் தலைவராக சனிக்கிழமை அவர் பதவியேற்றுக் கொண்டார். கோவையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

"சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியை அடைந்து இருந்தாலும், இன்னும் ஏராளமான சவால்களைச் சந்தித்து வருகிறது' என்று, நிகழ்ச்சியில் பேசிய கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் குறிப்பிட்டார்.

அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக அண்மையில் ரூ. 3.4 லட்சம் கோடியை பிரதமர் ஒதுக்கியுள்ளார். நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கட்டட வல்லுநர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பல்வேறு திட்டங்களுக்கு பொது மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை அரசு ஊக்குவிக்கிறது. இதை கட்டுமானத் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய பிஏஐ தலைவர் விஸ்வநாதன், நடப்பு ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை (சிஎம்டிஏ) போல, கோவை, மதுரை, திருச்சியிலும் பெருநகர வளர்ச்சி குழுமங்களை உருவாக்க முழு முயற்சி எடுக்கப்படும். கட்டுமானத் துறைக்கான பலமுறை வரிகளைக் குறைப்பது, ஸ்டீல், சிமெண்ட் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருள்களின் திடீர் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நெறிப்படுத்தும் அமைப்பை ஏற்படுத்துவது, கட்டுமானத் தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

பிஏஐ அகில இந்திய தலைவர் பகவான் ஜே.தியோகர், தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எம்.என்.கந்தசாமி, பிஏஐ முன்னாள் தலைவர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், வி.ராமசந்திரன், கட்டடக் கலை வல்லுநர் டி.எஸ்.ரமணி சங்கர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 21 April 2010 09:27