புதிய மாஸ்டர் பிளான் தயாராகிறது மதுரையை சுற்றி 725 ச.கி.மீ. பரப்பளவில் நிலத்தின் பயன்பாடு மாறுவதால் விதிமுறைகளில் மாற்றம்

Monday, 24 January 2011 08:15 administrator நாளிதழ்௧ள் - பெ௫ந்திட்டம்
Print

தினகரன்       24.01.2011

புதிய மாஸ்டர் பிளான் தயாராகிறது மதுரையை சுற்றி 725 ச.கி.மீ. பரப்பளவில் நிலத்தின் பயன்பாடு மாறுவதால் விதிமுறைகளில் மாற்றம்


மதுரை, ஜன. 24:

மதுரை உள்ளுர் திட்டக்குழும பகுதி 725 சதுர கி.மீ. பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், புதிய மாஸ்டர் பிளான் தயாராகிறது. நிலத்தின் பயன்பாடு மாறுவதால் விதிமுறைகள் மாற்றம் செய்யப்படுகிறது.

மதுரை மாநகராட்சி எல்லை 52 சதுர கி.மீ. பரப்பளவில் இருந்து 148 ச.கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்பட்டு, வரும் அக்டோபர் முதல் அமலாகிறது. இதேபோல் மதுரை உள்ளூர் திட்ட குழும பகுதி 725 ச.கி.மீ. பரப்புக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போதுள்ள மாநகராட்சி பகுதியுடன் திருமங்கலம், ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், உசிலம்பட்டி, நகராட்சிகள், விளாங்குடி, ஆர்வி.பட்டி, திருநகர், பரவை, சோழவந்தான் பேரூராட்சிகள், தாமரைப்பட்டி, திருமோகூர், தண்டலை, சிலைமான், கீழடி, கொந்தகை, காரியாபட்டி உள்ளிட்ட 171 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மனைப்பிரிவு மற்றும் கட்டிடங்கள் அனுமதி அளிப்பதில் மதுரையில் 1993ம் ஆண்டு மாஸ்டர் பிளான் நடைமுறையில் உள்ளது. மாநகராட்சி எல்லை மற்றும் உள்ளூர் திட்டக்குழும பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளின் எதிர்கால வளர்ச்சி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலத்தின் பயன்பாடு மாறி வருகிறது. குறிப்பாக வயல்வெளிகள் வீட்டு மனைகளாகவும், வர்த்தக கட்டிடங்களாகவும், குடியிருப்பு பகுதிகள் தொழிற்சாலை பகுதியாகவும், தொழிற்சாலை பகுதி குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டிடங்களாக மாறி வருகின்றன.

அதற்கு ஏற்ற வகையில் 725 ச.கி.மீ. பரப்புக்கு மதுரையின் புதிய மாஸ்டர் பிளான் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தயாராகி உள்ளது. இதன்மூலம் கட்டிட அனுமதி பெறுவது எளிதாக்கப்பட்டு, மதுரையிலேயே அளிக்கப்படும். சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த மாஸ்டர் பிளானில் நகரை சுற்றிலும் வளர்ச்சிக்கு ஏற்ப விதிமுறைகள் உருவாக்கப்படும். மதுரையை சுற்றி அவுட்டர் ரிங்ரோடு திட்டம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும் சேர்த்து கொள்ளப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.