தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து வந்துள்ள நவீன வாகனம்

Wednesday, 05 February 2014 10:28 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள் ௧ட்டமைப்பு
Print

தினத்தந்தி            05.02.2014

தெரு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து வந்துள்ள நவீன வாகனம்

 

 

 

 

 

நாய்க்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய லண்டனில் இருந்து நவீன வாகனம் மதுரைக்கு வந்துள்ளது.

வேட்டை

மதுரையில் நாய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் சாலைகளில் நடந்தால், நாய்க்கடி உறுதி என்ற நிலை தான் மதுரை மக்களுக்கு உள்ளது. மனிதர்களை வேட்டையாட இரவு நேரங்களில் நாய்கள், கூட்டம் கூட்டமாக திரிகின்றன. நாய் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

நாய்களின் இனப் பெருக் கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி லாரி நிலையத்தில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்படுகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் வெற்றி பெற முடியவில்லை.

நவீன கருத்தடை வாகனம்

இந்த நிலையில், லண்டனில் உள்ள உலக கால்நடை தொண்டு நிறுவனம், மதுரையில் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய உதவி செய்வதாக அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது. இதற்காக லண்டனில் இருந்து நவீன கருத்தடை வாகனம் ஒன்றும், மருத்துவ குழுவும் மதுரைக்கு வர முடிவு செய்யப்பட்டு இருந்தது.

லண்டனில் இருந்து மும்பைக்கு கப்பலில் வந்த நவீன வாகனத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விட்டனர். ரூ.7 கோடிக்கு வரி காட்டினால், வாகனத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதிப்போம் என்று கூறிவிட்டனர். எனவே இந்த வாகனம் மதுரைக்கு வரவில்லை. வெறும் லண்டன் மருத்துவ குழுவினர் மட்டும் வந்தனர். அவர்கள் நாய்களை பிடித்து ஆபரேஷன் செய்தனர்.

ஆபரேஷன் தியேட்டர்

இந்த நிலையில் மும்பையில் துறைமுகத்தில் இருந்த வாகனம் மீட்கப்பட்டு, அசாம் மாநிலத்தில் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பணி செய்தது. நேற்று மதுரை வந்தது. இந்த நவீன வாகனத்தில் ஆபரேஷன் தியேட்டர், சி.டி.ஸ்கேன், எக்.ஸ்ரே வசதி போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. நாய்களுக்கு ஆபரேஷன் செய்வதை டி.வி.யில் பார்க்கும் வசதியும் உள்ளது.

இந்த திட்டத்தை கமிஷனர் கிரண்குராலா முன்னிலையில் மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். நகர்நல அலுவலர் யசோதாமணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாய்களுக்கு ஆபரேஷனும், டாக்டர்களுக்கு பயிற்சியும் நேற்று அளிக்கப்பட்டன.