மழைக்காலம்: திருமணிமுத்தாறில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

Saturday, 18 July 2009 09:35 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமணி 18.07.2009

மழைக்காலம்: திருமணிமுத்தாறில் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

சேலம், ஜூலை 17: சேலத்தில் மழைக் காலம் தொடங்குவதை அடுத்து திருமணிமுத்தாறில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

சேலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நகரின் முக்கிய வடிகால்களில் மழை நீர், கழிவு நீருடன் கலந்து ஓடுகிறது.

நகரின் பிரதான கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்ட திருமணி முத்தாறை அழகுபடுத்தும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மழைக் காலம் தொடங்கியுள்ளதால் திருமணி முத்தாறில் நீரோட்டத்தைத் தடுக்கும் விதத்தில் உள்ள கழிவுகளை அகற்றி மழை நீர் எளிதில் செல்ல வழி ஏற்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் கே.எஸ். பழனிச்சாமி உத்தரவிட்டார். இதையடுத்து திருமணிமுத்தாற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அணைமேடு பகுதியில் இருந்து தொடங்கிய பணியில் 150-க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், 2 மினி பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இது குறித்து ஆணையர் பழனிச்சாமி கூறியது: மழைக் காலத்தையொட்டி திருமணிமுத்தாறில் உள்ள குப்பைகள், அடைபட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. திருமணிமுத்தாறு அழகுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வரை இப்பணி நடைபெறும்.

இதில் சம்பந்தப்பட்ட வார்டுகளைச் சேர்ந்த துப்புரவு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் 3 நாள்கள் இப்பணி நடைபெறும். இதேபோல் நகரின் முக்கிய கழிவு நீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டு சீர் செய்யப்படும்.

பள்ளிகளுக்கு வசதிகள்

மாநகராட்சியில் போதிய அளவு கல்வி நிதி உள்ளது. இதனைக் கொண்டு மாநகராட்சிக்குள் உள்ள 10 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 87 பள்ளிகளுக்கும் கட்டடம், கழிப்பிடம், இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அடிப்படை வசதிகள் தேவைப்படும் பள்ளிகளை மாநகராட்சிப் பொறியாளர்கள் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு தயாரிப்பார்கள்.

முதல் கட்டமாக அம்மாப்பேட்டை அரசுப் பள்ளியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அடுத்த 4 மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.