நகரில் டெங்கு பாதிப்பைக் குறைக்க 15 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள்

Thursday, 04 December 2014 10:07 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமணி        04.12.2014

நகரில் டெங்கு பாதிப்பைக் குறைக்க 15 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள்

மதுரை நகரில் டெங்கு பாதிப்பில் பள்ளி மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஊரகப் பகுதியிலிருந்து 15 சுகாதார ஆய்வாளர்கள் மாற்றுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் செல்லூர், விஸ்வநாதபுரம், கீழச்சந்தைப்பேட்டை, தத்தனேரி உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு பாதித்தோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதில், கீழச்சந்தைப் பேட்டையைச் சேர்ந்த பெனாசிர் எனும் மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்தை மேம்படுத்திட மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் அவசரக் கூட்டத்தை புதன்கிழமை கூட்டினார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ரோகிணிராம்தாஸ், மாநகராட்சி ஆணையர் கதிரவன், ஊரக சுகாதார துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து மாநகராட்சியில் சுகாதாரத்தை மேம்படுத்த ஊரகப்பகுதியிலிருந்து 15 சுகாதார ஆய்வாளர்கள் மாற்றுப்பணியாக மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை 26 குழந்தைகளும், 178 பேரும் தீவிர காய்ச்சலுக்காக சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் யாருக்கும் டெங்கு பாதிப்பில்லை என மருத்துவர்கள் கூறினர்.