கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்டம்

Thursday, 09 October 2014 12:11 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print
தினமணி       09.10.2014

கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை சீரமைக்க ரூ.3 கோடியில் திட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் கழிப்பறைகளை ரூ.3 கோடியில் சீரமைக்கவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ரூ.50 லட்சத்தில் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத் திட்டங்களைச் செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மொத்த, சில்லறை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், சந்தைக்கு பல்வேறு பொருள்களை கொண்டு வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதுதவிர, கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் என பலர் வேலை செய்கின்றனர். இவர்களின் வசதிக்காக கோயம்பேடு சந்தையில் 67 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை போதிய பராமரிப்பின்றியும், உபயோகிக்க இயலாத வகையிலும் இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டினர்.

இதனால், அங்கு வரும் பலர் சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளைக் கழிக்கின்றனர். இதனால், சந்தையைச் சுற்றி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும், கோயம்பேடு சந்தையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை எனவும் புகார் எழுந்தது. இதைப் பயன்படுத்தி பலர் தண்ணீர் பாட்டில்களை அதிக விலையில் விற்பனை செய்வதும் தொடர்ந்தது.

இதுதொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்தக் கழிப்பறைகளைச் சீர்செய்யவும், நல்ல குடிநீர் கிடைக்க குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, கோயம்பேடு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கூறியது:

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.3 கோடியில் 67 கழிப்பறைகளைச் சரிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளொன்றுக்கு தலா 2,000 ஆயிரம் லிட்டர் நீரை சுத்திகரிக்கும் வகையில் 2 குடிநீர் நிலையங்களை (ரிவர்ஸ் ஓஸ்மோசிஸ் பிளான்ட்) ரூ.50 லட்சத்தில் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்பட உள்ளன. ஒப்பந்தப் புள்ளிகள் குறித்து நவம்பர் மாதத்தில் முடிவெடுக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பெற்று கழிப்பறைகளும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பயன்பாட்டுக்கு வரும். இந்தப் பணிகளை அங்காடி நிர்வாகக் குழு மூலம் மேற்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆணையிட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.