செப். 6 முதல் மாநகராட்சிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம்

Monday, 01 September 2014 09:33 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமணி       01.09.2014

செப். 6 முதல் மாநகராட்சிகளில் சிறப்புத் தூய்மை இயக்கம்

பாஜக தலைமையிலான 3 தில்லி மாநகராட்சிகளிலும் இம்மாதம் 6 முதல் 20ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மை இயக்கம் நடைபெறும் என்று தில்லி பிரதேச பாஜக தலைவரும், தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தலைவருமான சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தத் தூய்மை இயக்கத்தின்போது காலி இடங்கள், ரயில்வே இருப்புப்பாதை அருகில் உள்ள பகுதிகள், வழக்கமாக குப்பை கொட்டப்படும் தெரு முனைகள் ஆகியவை பராமரிக்கப்படும்.

மாநகராட்சிகளின் துப்புரவு ஆய்வாளர்கள், முதன்மைப் பொறியாளர்கள், மண்டல துணை ஆணையர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூய்மைப் பணிகளை ஆய்வு மேற்கொள்வர். குறிப்பாக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2 காலனி குடியிருப்புகள் தூய்மைப்படுத்தப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்துவார்கள்.

மாநகராட்சிகளின் மேயர்கள், நிலைக் குழுத் தலைவர்கள, ஆணையர்கள் ஆகியோர் இந்தத் தூய்மை இயக்கத்தின்போது திடீர் ஆய்வு மேற்கொள்வர். மேலும், தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி உறுப்பினர்கள், மண்டலத் தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி அறிக்கை அளிப்பார்கள். தூய்மை இயக்கத்தைத் தொடர்ந்து, இம்மாதம் 25 முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2 வரை தூய்மை மற்றும் சுகாதார வாரம் கடைப்பிடிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.