சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் சுகாதாரப் பணிகள் மீண்டும் தனியார் வசம்

Friday, 31 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமணி             31.01.2014

சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் சுகாதாரப் பணிகள் மீண்டும் தனியார் வசம்

சேலம் மாநகராட்சியில் 21 வார்டுகளில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்வதை நிர்வாகம் மீண்டும் தனியார் வசம் ஒப்படைத்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் 3 ஆண்டுகள் சுவச்தா கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 21 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வந்தது.

ஆனால், அந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்தபோது, தனியார் நிறுவனம் சரிவர பணியாற்றவில்லை என்பதால் சுகாதாரப் பணிகளை இனி தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அப்போதைய மேயர் ரேகா பிரியதர்ஷிணி பதவி காலத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

இதற்கு மேயர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், திடீரென கடந்த 2010 ஜூலை மாதம், பெங்களூருவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பி. நிறுவனத்துக்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அரசு கொள்கைப்படி மாநகராட்சிகளில் 3-இல் ஒரு பங்கு வார்டுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு தனியார் வசம் வழங்க வேண்டும் என்று அப்போதைய நிர்வாகம் விளக்கம் அளித்தது.

ஆனால், எஸ்.ஆர்.பி. நிறுவனம் உறுதி அளித்த அளவு பணியாளர்களையோ, வாகனங்களையோ அந்த நிறுவனம் பணியில் ஈடுபடுத்தவில்லை என்றும் ஊழியர்களுக்கு குறைந்த கூலியே வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், எஸ்.செüண்டப்பன் தலைமையில் அதிமுக அரசு பதவிக்கு வந்ததும் ஒப்பந்தக்காலம் முடிவடையும் முன்னரே கடந்த 29.10.12 அன்று எஸ்.ஆர்.பி. நிறுவனத்தின் ஒப்பந்தம் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், 1.11.12 முதல் சுய உதவிக் குழுக்களைப் பணியமர்த்தியும், வாகனங்களை தனியாரிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பெற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அடுத்த 3 வாரங்களிலேயே சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட உத்தரவும் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், 21 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியை சென்னையைச் சேர்ந்த சீனிவாஸ் வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்துக்கு அளித்து மாநகராட்சி வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த நிறுவனம் அள்ளும் குப்பைகளுக்கு டன்னுக்கு 1,448 ரூபாயை மாநகராட்சி வழங்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநகரில் உள்ள 2, 7, 12 முதல் 19, 23 முதல் 27, 29 முதல் 33, 45 ஆகிய 21 வார்டுகளில் தனியார் நிறுவனம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.