மாநகராட்சி பள்ளி கழிப்பிடம் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டம்

Friday, 31 January 2014 11:31 administrator நாளிதழ்௧ள் - பொது சுகாதாரம் / துப்புரவு
Print

தினமலர்                30.01.2014

மாநகராட்சி பள்ளி கழிப்பிடம் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில், 38 துவக்கப் பள்ளிகள், 24 நடுநிலைப் பள்ளிகள், உயர் மற்றும் மேநிலைப் பள்ளிகள் தலா ஒன்று என மொத்தம், 64 பள்ளிகள் உள்ளன. இதில், துவக்கப் பள்ளியில், 2,640 பேரும், நடுநிலைப் பள்ளிகளில், 4,816 பேரும், உயர்நிலைப் பள்ளியில், 208 பேரும், மேல்நிலைப் பள்ளியில், 282 பேரும் பயில்கின்றனர். இப்பள்ளிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அவசர காலத்திற்கு உதவும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் தீயணைப்பு கருவிகள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளிகளில் உள்ள இடவசதிக்கு ஏற்ப பசுமைத் தளம் அமைக்கவும், சோலார் அமைப்பும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பிடங்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரிக்கும் நோக்கத்தோடு, கழிப்பிட பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், தளவாட பொருட்கள், நவீன கரும் பலகைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இது தவிர திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட, 5 வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது. மாநகராட்சியின் கல்வி குழு கூட்டத்தில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளுக்கு இன்று, (30ம் தேதி) நடக்கும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளில் தரம் உயரும் என்ற நிலை உருவாகியுள்ளது.