பெ.நா.பாளையம் பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் காங்கிரீட் வீடுகள்

Wednesday, 04 November 2009 06:19 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி 4.11.2009

பெ.நா.பாளையம் பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் காங்கிரீட் வீடுகள்

பெ.நா.பாளையம், நவ. 3: ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்புனரமைப்புத் திட்டத்தின் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் பிரிவின் கீழ் பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் சுமார் ரூ. 1.50 கோடி செலவில் 130 காங்கிரீட் வீடுகள் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இப்பேரூராட்சியில் 13-வது வார்டு குடிசைகள் அதிகமுள்ள பகுதியாகும். ஏழைமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வண்ணம் மத்திய மாநில அரசுகள் இத்தேசியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மாவட்ட நிர்வாகமானது கோவை மாவட்டத்தின் அனைத்து பேரூராட்சிகளில் உள்ள குடிசை, ஓட்டுவீடுகளை மாற்ற நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மட்டும் இதனைச் செயல்படுத்த முன்வந்தது. இதனையடுத்து இங்குள்ள விவேகானந்தபுரம், அண்ணா நகர் பகுதிகளில் வசிக்கும் 150-க்கும் மேற்பட்ட ஏழைமக்களின் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றத் திட்டமிடப்பட்டது.

இதில் 138 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1.60 லட்சம் செலவில் 240 சதுரஅடியில் தற்போது துரிதமாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1.05 லட்சத்தை அரசுகள் இலவசமாக தருகின்றன. ரூ.20 ஆயிரத்தை பெ.நா.பாளையத்தில் உள்ள தனியார் வங்கி கடனாக தருகிறது.மீதம் உள்ள பணத்தை பயனாளிகளை செலுத்துகின்றனர்.இத்துடன் இங்குள்ள சுயஉதவிக் குழுக்கள் சிறுதொழில்கள் கற்றுக்கொள்ள பணிமனையும் கட்டப்படுகிறது. இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், 13-வது வார்டு கவுன்சிலர் கே.முருகேசன் ஆகியோர் கூறியது. கோவை மாவட்டத்திலேயே இப்பேரூராட்சியில்தான் இது செயல்படுத்தப்படுகிறது. இப்பணி நிறைவுறும்போது ஏறத்தாழ இங்கு குடிசை வீடுகளே இல்லை என்ற நிலை உருவாகும். குறிப்பாக இதனைப் பயனாளிகளே கட்டிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் தரமான வீடுகள் கட்டப்படுவது உறுதி செய்யப்படுகின்றது.

மானியத் தொகையானது நான்கு தவணைகளில் வழங்கப்படுகிறது.வங்கிக் கடனுதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றுள்ளனர். இன்னும் நான்கு மாதங்களில் இப்பணிகள் நிறைவுறும் என்றார்.

Last Updated on Wednesday, 04 November 2009 06:24