ஜீவா நகர் மக்களுக்கு விரைவில் மாற்று வீடுகள்... குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி பரிந்துரை

Thursday, 04 May 2017 08:53 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமலர்      04.05.2017

ஜீவா நகர் மக்களுக்கு விரைவில் மாற்று வீடுகள்... குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி பரிந்துரை

கவுண்டம்பாளையம் ஜீவா நகரில், வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, பாதை அமைக்க வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்துவதற்காக, அங்குள்ள 203 குடும்பங்களுக்கு, மாற்று வீடுகளை ஒதுக்கீடு செய்யுமாறு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது, ஜீவா நகர். கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தாக இருந்தபோது, வண்டிப்பாதையாக இருந்த இடத்தை ஆக்கிரமித்து, 203 பேர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இதே பகுதியிலுள்ள புனித தாமஸ் பள்ளி, சட்டரீதியாக போராடியது. ஆனால், மாவட்ட நிர்வாகம், இதை குடிசைப் பகுதியாக அறிவித்து, வண்டிப்பாதையை 'புறம்போக்கு' நிலம் என வகைப்படுத்தியது.

முதல் தீர்ப்பு!பள்ளி சார்பில் தாக்கல் செய்த மனுவை (எண்:7769/2000) விசாரித்த ஐகோர்ட், 'ஆக்கிரமிப்புகளை ஐந்து மாதங்களுக்குள் அகற்ற வேண்டும்' என்று, 2003 மார்ச் 4ல் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட், முந்தைய தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை என்று கூறி, 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்புகள் கொடுத்து, ஆட்சேபங்களைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு' 2008 நவ.,17ல் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கம் மனுப்போர் நடத்தியது; அதன் விளைவாக, 2011 ஜன.,18ல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, ஜீவா நகர் குடிசைவாசிகளுக்கு 7 (1) நோட்டீஸ் தரப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தும் முன், தேர்தல் வந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2012 ஜூன் 19ல், அன்றிருந்த கலெக்டர் கருணாகரன், செயல்முறை ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.

கலெக்டர் உத்தரவு ரத்து!ஐகோர்ட் உத்தரவு, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் கோரிக்கை எதையும் ஏற்காத அவர், 'ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய அவசியமில்லை' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பின்பே, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகள் இழுத்த வழக்கில், கடந்த ஜன.,19 அன்று, ஐகோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், முக்கிய தீர்ப்பை வழங்கியது.

கலெக்டர் கருணாகரனின் செயல்முறை ஆணையை ரத்து செய்த ஐகோர்ட், 'ஜீவா நகரில் வசிப்போர்க்கு, மாற்று இடங்களை வழங்கி, ஒரு கி.மீ., துாரத்துக்கு இருக்கும் ஆக்கிரமிப்புகளை, ஆறு மாதங்களுக்குள் அகற்றவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, உடனடியாக, நிறைவேற்றக்கோரி, கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அங்கு வசிக்கும் 203 குடும்பங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

தற்போது, அந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகளை, ஒதுக்கீடு செய்து தருமாறு, குடிசை மாற்று வாரியத்துக்கு மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் பரிந்துரைத்து, பட்டியலையும் அனுப்பியுள்ளார். மாநகராட்சி பரிந்துரையை ஏற்று, இவர்களுக்கு மாற்று வீடுகளை, குடிசை மாற்று வாரியம் விரைவில் ஒதுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்பட்டால், மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோடுகளிடையே இணைப்புச்சாலை அமைப்பதற்கான சாத்தியம் உருவாகும்.

வீடுகள் ஒதுக்குவதில் பிரச்னையில்லை!ஜீவா நகர் மக்களுக்கு, மாற்று வீடுகள் ஒதுக்குவது தொடர்பாக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரிடம் கேட்டபோது, ''ஐகோர்ட் உத்தரவின்படி, மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது; சட்டரீதியாக எந்த தடையுத்தரவும் இல்லாதபட்சத்தில், பட்டியலில் உள்ள, 203 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார்.

கே.கே.புதுார் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இதில் தடையுத்தரவு எதுவும் இனி வர வாய்ப்பில்லை; ஏனெனில், தீர்ப்பு ஜன.,19ல் வெளியானது; ஜன.,25ல் அவர்களுடைய கையில் கிடைத்துள்ளது. அதிலிருந்து, மூன்று மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்து, தடை பெற்றிருக்கலாம்; ஆனால், ஏப்., 25 உடன் அதற்கான அவகாசம் முடிந்து விட்டதால், இனி தடை வாங்க வாய்ப்பில்லை' என்றனர்.