300 குடிசை மாற்று வாரிய வீடுகள்: அமைச்சர் ஆய்வு

Thursday, 01 October 2009 06:00 administrator நாளிதழ்௧ள் - குடிசைப்பகுதி மேம்பாடு / வீட்டு வசதி
Print

தினமணி 1.10.2009

300 குடிசை மாற்று வாரிய வீடுகள்: அமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர், செப். 30: தஞ்சாவூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டியில் ரூ.6.96 கோடி மதிப்பீட்டில் 300 குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டப்படுவதை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சுப. தங்கவேலன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் நகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருந்து வரும் குடிசைப் பகுதி மக்களின் மேம்பாட்டிற்காக தமிழக அரசின் சிறப்பு திட்டமாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைத்து வசதிகளுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது, அமைச்சர் சுப. தங்கவேலன் கூறியது:

ஒவ்வொரு வீடும் 210 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது. அடிப்படை வசதிகளைச் சேர்த்து ஒரு வீட்டின் மதிப்பு ரூ. 2.32 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகள் 20 ஆண்டுகளுக்கு மாதத் தவணையாக ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும்.

இந்தக் குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு விதிமுறைகள்படி தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்றார் தங்கவேலன்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி (திருவோணம்), தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைமை பொறியாளர் சி. பழனியப்பன், மேற்பார்வை பொறியாளர் தௌலத், ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாவதி விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 01 October 2009 07:16