கோலார் உள்பட 4 நகரங்களில் ரூ.100 கோடியில் "மெகா சந்தைகள்

Tuesday, 13 April 2010 10:07 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமணி 13.04.2010

கோலார் உள்பட 4 நகரங்களில் ரூ.100 கோடியில் "மெகா சந்தைகள்

பெங்களூர், ஏப்.12: தோட்ட விளைபொருள்களை விற்பனை செய்ய தலா ரூ.100 கோடி செலவில் கோலார் உள்பட 4 நகரங்களில் "மெகா சந்தைகள்' கட்டப்படும் என்று தோட்டக்கலைத் துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி தெரிவித்தார்.

அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தோட்ட விளைபொருள்களை விற்பனை செய்ய மாவட்டம்தோறும் சந்தைகள் அமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் விவசாயிகள் விளைவித்த தோட்ட விளை பொருள்களை விற்பனை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். சரியான விலையும் கிடைக்கும்.

தோட்டக்கலைத் துறையை மேம்படுத்த தேசிய தோட்டக்கலைத் துறை மிஷன் ரூ.110 கோடியை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் தோட்டக்கலைத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தோட்ட விளைபொருள்கள் ஆண்டுக்கு 15 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 21 லட்சம் டன்னாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு தரமான விதை, பூச்சி மருந்துகள் வழங்கப்படும்.

விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமாகும். இதற்காக கோலார்,பெல்காம், மைசூர் மற்றும் ஹாசன் ஆகிய நான்கு நகரங்களில் 4 மெகா சந்தைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த மெகா சந்தை ஒவ்வொன்றும் தலா ரூ.100 கோடி செலவில் கட்டப்படும். விவசாயிகளிடம் தோட்ட விளைபொருள்களை பெங்களூரில் உள்ள ஹாப்காம்ஸ் போன்ற அமைப்பு மூலம் கொள்முதல் செய்து அவை மெகா மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்.

இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு சரியான விலையும், நுகர்வோருக்கு சரியான விலையில் தரமான பொருள்களும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

Last Updated on Tuesday, 13 April 2010 10:09