பெங்களூருவில் மாநகராட்சி ஏரிகள், பள்ளிகளை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் முடிவு

Saturday, 25 January 2014 07:49 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமணி             25.01.2014 

பெங்களூருவில் மாநகராட்சி ஏரிகள், பள்ளிகளை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் முடிவு

பெங்களூரு மாநகராட்சிக்குச் சொந்தமான ஏரிகள், பள்ளிகளைப் பராமரிக்க தனியார் தொழில் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக "நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா அடுத்த மாதம் தொடக்கிவைக்கிறார்

இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை மேயர் சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூருவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏரிகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், சாலைகள், மருத்துவமனைகளை சமூகப் பொறுப்புடன் தத்தெடுத்து நிர்வகிக்க பல தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

இதற்காக பிப்ரவரி 2-வது வாரத்தில் "நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கிறார்.

 இந்தத் திட்டத்தின்படி, தனியார் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்.

"நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தின் மூலம் பெங்களூருவில் 154 பள்ளிகள், 5 ஏரிகள், பல சாலைகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் வளர்ச்சி பெறும்.

இதைக் கண்காணிக்க மாமன்ற உறுப்பினர் சதாசிவா தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.  பேட்டியின் போது, மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா, மாநகராட்சி ஆளும் கட்சித் தலைவர் அஸ்வத்நாராயண கெüடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.