எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி: இலக்கை எட்டாமல் பின்தங்கிய தமிழகம்

Tuesday, 26 February 2013 11:41 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print
தின மலர்                26.02.2013

எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி: இலக்கை எட்டாமல் பின்தங்கிய தமிழகம்


புது டில்லி: இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, தமிழகத்தில், 1,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தாலும், வெறும், 330 மெகா வாட் மட்டுமே, உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால், எரிவாயு மூலமான மின் உற்பத்தியில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வது, மிகவும் எளிதானது என்பதோடு, விலை மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு, எரிவாயு பற்றாக்குறையே காரணம். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் கிடைக்கும் எரிவாயுவை, குழாய்கள் மூலம், தமிழகத்திற்கு எடுத்து வர, 2006ல் திட்டமிடப்பட்டது. இதற்கான பணியை, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்படைத்தது. ஆனால், எந்தப் பணியையும், ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளாமல், அப்படியே கிடப்பில் போட்டது. இதனால், எரிவாயு குழாய் அமைக்கும் ஒப்பந்தமே, கடந்த ஆண்டு, மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது; புதிய ஒப்பந்தமும், இதுவரை போடப்படவில்லை. அதே நேரத்தில், காக்கிநாடாவில் இருந்து, குஜராத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, எரிவாயு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாராஷ்டிராவுக்கும், எரிவாயு முழு அளவில் கிடைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, குஜராத் மாநிலம், 5,133 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவில், எரிவாயு மூலம், 3,427 மெகா வாட் மின்சாரமும், ஆந்திராவில், 3,370 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை பயன்படுத்தி, 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, தஞ்சாவூரில் உள்ள கோவில் கலப்பலில், 107 மெகா வாட், பேசின் பிரிட்ஜில், 120 மெகா வாட், குத்தாலத்தில், 100 மெகா வாட், வழுத்தூரில், 186 மெகா வாட், கருப்பூரில், 119 மெகா வாட், வள்ளந்திரியில், 52 மெகா வாட், பி.நல்லூரில், 330 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. வெறும், 390 மெகா வாட் மின்சாரம் மட்டுமே, தமிழகத்தில், எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தியில் தமிழகம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம். கேரள மாநிலம் காயங்குளத்தில், ஏற்கனவே, 700 மெகா வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நிலையமும், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில், விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, செம்மேனி மற்றும் பிரம்மபுரம் என்ற இரண்டு இடங்களில், எரிவாயுவைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள், அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated on Tuesday, 26 February 2013 11:43