கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.18.80 லட்சம் தொடக்க நிதி

Wednesday, 22 August 2012 11:02 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமணி                  22.08.2012

கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.18.80 லட்சம் தொடக்க நிதி

திருவண்ணாமலை, ஆக. 21: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தைச் சேர்ந்த 47 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.18.80 லட்சம் தொடக்க நிதியை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான விழா நடைபெற்றது. இவ் விழாவில், தொடக்க நிதிக்கான காசோலைகளை 47 ஊராட்சித் தலைவர்களிடம் வழங்கி ஆட்சியர் விஜய் பிங்ளே பேசியது:

புதுவாழ்வுத் திட்டம் என்பது தமிழக அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வறுமை ஒழிப்புத் திட்டமாகும். 2006 முதல் இத்திட்டம் செங்கம், புதுப்பாளையம், திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை, போளூர் ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 219 கிராம ஊராட்சிகளில் புதுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம வறுமை ஒழிப்புச் சங்க தொடக்க நிதி என்பது கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் நிர்வாகச் செலவுகள், அலுவலக அமைப்புச் செலவுகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்க வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இப்போது, போளூர் ஒன்றியம், போளூரில் உள்ள 47 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.18.80 லட்சம் தொடக்க நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் முறையாகப் பயன்படுத்தி தங்களுடைய ஊராட்சியில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, அனைத்துத் துறைகளின் அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் வழிமுறைகள் பற்றிய வழிகாட்டி கையேட்டை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே வெளியிட்டார். இதில், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் ராஜபாண்டியன், 47 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 23 August 2012 04:27