விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு

Wednesday, 25 July 2012 09:26 administrator நாளிதழ்௧ள் - பொதுவானவை௧ள்
Print

தினமலர்           24.07.2012
           
விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு

ஒரு விளக்கு திட்டத்தின் கீழ், குடிசை வீடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்திற்கான வரையறை, தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், நஷ்டத்தில் தள்ளாடும் மின் வாரியம், மேலும் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் ஏற்கனவே, ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால், தனியாரிடம் பெறும் மின்சாரத்திற்கு கூட, பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. மின் திருட்டு, மின் இழப்பு; மின் உற்பத்தி திட்டங்கள் தாமதம் போன்ற பல காரணங்களால், வாரியம் தட்டுத் தடுமாறுகிறது.

மானிய அளவு:

இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு, குத்து மதிப்பாக வழங்கப்படும் மானியத் தொகையைப் போலவே, குடிசைகளுக்கான (40 வாட்) ஒரு விளக்கு திட்டத்தின் கீழும், குறிப்பிட்ட ஒரு தொகையை மானியமாக, தமிழக அரசு பெற்று வருகிறது.முன்பு ஒரு விளக்கு திட்டத்தின் கீழ், எவ்வளவு மானியத் தொகை அளிக்கப்பட்டதோ அதே அளவுக்கே தற்போதும் மானியம் வழங்கப் படுகிறது. இத்தகைய குடிசை வீடுகளில் பெரும்பாலானவற்றில், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் உள்ளது. அனைத்து குடும்பதாரர்களுக்கும், விலையில்லா தொலைக்காட்சிப் பெட்டியை (70 வாட்) தமிழக அரசு வழங்கியதால், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரப் பட்டியலில், அதுவும் சேர்க்கப் பட்டது.

அதிகரிக்குமா?

தற்போது, மாநிலம் முழுவதும், மின் விசிறி, மாவு அரவை இயந்திரம், கலவை அரவை இயந்திரம் ஆகியவற்றை, தமிழக அரசு, இலவசமாக வழங்கி வருகிறது. இவைகளை உபயோகிக்க கூடுதல் மின்சாரம் தேவை என்பதால், அவற்றையும் குடிசைகளுக்கான இலவச மின்சார வரையறைப் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப் பட்டு உள்ளது. ஆனால், அதற்கேற்ப மானியம் எப்போது அதிகரிக்கப்படும் எனத் தெரியவில்லை. இதனால், ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளால் தள்ளாடும் தமிழக மின் வாரியத்தின் சுமை அதிகரிக்கும். எனவே, குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை, தமிழக அரசு முறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வாரியம் முன்வருமா?

மின் கட்டணம் வசூலிக்கும் வாரிய அலுவலகங்களில், குடிசை வீட்டிற்கு தரப்படும், ஒரு விளக்குக்கு 40 வாட் மற்றும் இலவச "டிவி' பயன்பாட்டிற்கு 70 வாட் என்ற குறிப்பு தற்போது, ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இனி, எவை எல்லாம் இலவசம்; அதற்குரிய "வாட்' அளவு என்ன என்பது குறிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டி பயன்படுத்தும் நுகர்வோருக்கு, எந்த அடிப்படையில் கட்டணம் முறைப் படுத்தப் படும் என்பது தெரியவில்லை.

- நமது நிருபர் -