மேற்கு மண்டலத்தில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: மேயர்

Wednesday, 22 July 2009 10:57 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமணி 22.07.2009

மேற்கு மண்டலத்தில் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: மேயர்

மதுரை, ஜூலை 21: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜி. தேன்மொழி தெரிவித்தார்.

மேற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி மேயர் தலைமையில் ஆணையர் எஸ். செபாஸ்டின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அடிப்படை வசதிகள், புறவழிச்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுதல், எல்லீஸ் நகர்ப் பகுதியில் கிருதுமால் நதியில் கழிவுநீர் சாக்கடை கலப்பது மற்றும் குப்பைகளைக் கொட்டுவது குறித்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், கவுன்சிலர்கள் சார்பில் 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அப்போது மேற்கு மண்டலப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான பி.பி. சாவடியில் உள்ள இடத்தில் மருத்துவமனை அல்லது வணிக வளாகம் கட்டுவது குறித்து மேயர் ஆய்வுசெய்தார். தொடர்ந்து விராட்டிபத்து, நடராஜ் நகர் மெயின் வீதி, பெத்தானியாபுரம் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் பணிகளைப் பார்வையிட்டு, இப்பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில் துணை மேயர் பி.எம்.மன்னன், கவுன்சிலர்கள் தம்பித்துரை, ராஜபாண்டி, தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார், நகரமைப்பு அலுவலர் முருகேசனஅ, நகர் நல அலுவலர் டாக்டர் யசோதாமணி, உதவி ஆணையர் (மேற்கு) (பொறுப்பு) ரவீந்திரன், கல்வி அலுவலர் தனலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.