பூங்கா பராமரிப்புக்கு புது நிபந்தனை! பாழடைந்த பகுதிகள் புதுப்பொலிவு பெறுமா?

Monday, 05 January 2015 07:27 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ஆக்கிரமிப்பு௧ள்
Print

தினமலர்         05.01.2015

பூங்கா பராமரிப்புக்கு புது நிபந்தனை! பாழடைந்த பகுதிகள் புதுப்பொலிவு பெறுமா?

கோவை : கோவை மாநகராட்சியில், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள பூங்காக்களை, குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பராமரிப்பதற்கு, புது நிபந்தனைகளை வகுத்துள்ளது மாநகராட்சி நிர்வாகம்.

கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில், 450க்கும் மேற்பட்ட பூங்கா இடங்கள் இருப்பதை மாநகராட்சி நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது. அதில், 20 சதவீதம் பூங்காக்களில் மட்டுமே, மரம் வளர்த்து, நடைபாதை அமைத்து பராமரித்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் தனியார் நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் பூங்கா பராமரிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளன. பூங்கா இடங்களை ஒப்படைத்தபோது, மின்விளக்கு மற்றும் தண்ணீர் வசதி மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

ஆனால், உறுதியளித்தபடி, பூங்காகளில் வசதிகளும் செய்யப்படவில்லை, மரங்களும் வளர்க்கப்படவில்லை. இதனால், பூங்கா அமைக்கும் திட்டம் கேள்விக்குறியானது. பராமரிப்பின்றியுள்ள பூங்காக்களையும், ரோட்டிலுள்ள மையத்திட்டுக்களையும் பராமரிக்க, குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் பொது நிறுவனங்கள் கடிதம் சமர்ப்பித்துள்ளன. அதன்படி, கோவை மாநகர எல்லைக்குள் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள பூங்காக்களை பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் புது நிபந்தனையை உருவாக்கியுள்ளது.

பூங்கா, ரோட்டின் மையத்தடுப்பு மற்றும் விளையாட்டு இடங்களை பராமரிக்க வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு
: அபிவிருத்தி பணிகளுக்கு, மாநகராட்சியில் ஒப்புதல் பெற வேண்டும். நடைபாதை, கான்கிரீட் நாற்காலிகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்களை பராமரிப்பு பொறுப்பாளர்கள் அமைக்க வேண்டும். வேறு கட்டுமானங்களோ, அறைகளோ கட்டக்கூடாது.பூங்கா, விளையாட்டு திடல் இடத்தின் உள்பகுதியில், மாநகராட்சி பரிந்துரைக்கும் மரங்கள் மற்றும் புல்தரைகள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும். பராமரிப்பு பணிக்கு அனுமதி வழங்கப்பட்ட, 15 நாட்களுக்குள், ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒப்புதல் வழங்கப்பட்ட நாளில் இருந்து, 60 நாட்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், பராமரிப்பு பணி மேற்கொள்ள விருப்பமில்லை எனக்கருதி, வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.குடியிருப்பு பகுதி மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ, பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளாவிட்டாலும், அனுமதியை ரத்து செய்து, வேறு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படும். இதனால், மாநகராட்சிக்கு ஏற்படும் செலவு தொகை, ஒப்பந்தம் செய்தவர்களிடம் இருந்து நஷ்ட ஈட்டுத் தொகையுடன் வசூலிக்கப்படும்.பூங்கா, விளையாட்டு திடலை யார் பராமரிக்கிறார்கள் என்ற விபரத்தை, 3 அடிக்கு, 2 அடி என்ற அளவில் தகவல் பலகையாக அமைக்க வேண்டும். அங்கு வேறு விளம்பரங்கள் அமைத்தால், முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதி பெற்று, மூன்றாண்டு காலம் முடிவடைந்ததும், புதுப்பித்தல் மனு, 30 நாட்களுக்கு முன்பாக கொடுக்க வேண்டும். இதற்காக வழங்கப்படும் உத்தரவை பயன்படுத்தி, பூங்கா மற்றும் விளையாட்டு திடல் இடத்திற்கு எவ்வித உரிமையும் கோரமுடியாது. பராமரிப்புக்கு தேவையான தண்ணீர், மின்வசதி மாநகராட்சியால் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மின்கட்டணத்தை பராமரிப்பாளரே செலுத்த வேண்டும்.அங்கு வரும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது. காலை, மாலை நேரத்தில் கால நிர்ணயம் செய்து, அதன்படி திறந்திருக்க வேண்டும். கால நிர்ணயம் குறித்து அறிவிப்பு இருக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புடன் விளையாட மற்றும் பூங்கா பராமரிப்புக்கு பாதுகாவலர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான, செலவு தொகை பராமரிப்பாளரை சேர்ந்தது.

மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டால், பராமரிப்பு உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படும். எவ்வித பாகுபாடும் காட்டாமல், அனைத்து தரப்பினரையும் அனுமதிக்க வேண்டும். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோரை அனுமதிக்கக்கூடாது.மாநகராட்சிக்கு பூங்கா இடம் தேவைப்பட்டால், முன்னறிவிப்பின்றி எடுத்துக்கொள்ளப்படும். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் அல்லது விதிகளுக்குமாறாக செயல்பட்டால்,பராமரிப்பு உத்தரவு ஒத்து செய்யப்படும்.இவ்வாறு, நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மீட்பு எப்போது?
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில், ஆக்கிரமிப்பிலுள்ள பூங்கா இடங்களை மீட்கவும், அனைத்து பொது ஒதுக்கீட்டு இடங்களையும் மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.'பொது ஒதுக்கீட்டு இடங்கள் மீதுள்ள, வழக்கு விசாரணையை வேகப்படுத்தி, இடங்களை மீட்கவும், உரிய பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, பணிகள் தொடர்ந்து சீராய்வு செய்யப்படும். ஆக்கிரமிப்பு குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.