நகர்புற ஏழை மக்கள் வீடு கட்ட வங்கி கடனுதவி பெறலாம்

Friday, 19 November 2010 05:50 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினகரன்                  19.11.2010

நகர்புற ஏழை மக்கள் வீடு கட்ட வங்கி கடனுதவி பெறலாம்

ஊட்டி, நவ. 19: நகர்புற ஏழைகள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் வீடு கட்டிக்கொள்ள வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் வீடு கட்டி கொள்ள வங்கி மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதனை செயல்படுத்தும் முறை மற்றும் பொதுமக்களுக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பயன்கள் குறித்து எடுத்துரைக்கும் ஆய்வு கூட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கில் நடந்தது.

கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கோவை வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ராமமூர்த்தி கலந்துக் கொண்டு பேசுகையில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி செய்ய திட்டம் வகுத்துள்ளது. இதன்படி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு நகர்புற ஏழைகள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.1 லட்சமும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரமும் கடனுதவிகள் வங்கி மூலம் வழங்கப்படும். இத்திட்டம் சிறப்பாக நடந்திட சம்பந்தப்பட்ட நகராட்சி தலைவர்கள், அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் நகர்புற ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் சிறந்த முறையில் மாவட்டத்தில் நடந்திட மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உதவிட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் பங்கேற்று உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே தேவையான அறிவிப்புகளை வழங்கி திட்டத்தை சீரிய முறையில் செயலாக்க அனைத்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளும் உதவிட வேண்டும் என்று கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கேட்டு கொண் டார்.