500 பேருக்கு ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவி

Tuesday, 02 November 2010 10:37 administrator நாளிதழ்௧ள் - வறுமை ஒழிப்பு
Print

தினமணி                       02.11.2010

500 பேருக்கு ரூ. 1 கோடியில் நலத் திட்ட உதவி

மதுரை, நவ.1: மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தின விழாவில் 500 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சியில் திங்கள்கிழமை உள்ளாட்சி தினவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்து, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்து வருகின்றன. உள்ளாட்சிகள் மூலம் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடிநீர், கல்வி, சுகாதாரம் என எந்தவொரு திட்டமும், உள்ளாட்சி மூலம்தான் பொதுமக்களுக்குச் சென்றடைந்து வருகிறது.

பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்தும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு திட்டங்கள் மக்களைச் சென்றடைய காரணமாக உள்ளது. கடந்த 2007 முதல் இந்த உள்ளாட்சி தினவிழா தமிழக அரசு மூலம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த விழா கொண்டாடப்படுகிறது என்றார் அவர்.

விழாவில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் 500 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டன.

விழாவில், துணை மேயர் பி.எம். மன்னன், துணை ஆணையர் தற்பகராஜ், மண்டலத் தலைவர்கள் இசக்கிமுத்து, நாகராஜன், வி.கே. குருசாமி, தலைமைப் பொறியாளர் சக்திவேல், மக்கள் தொடர்பு அதிகாரி ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, தமுக்கம் மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ, மாணவியர், செவிலியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 02 November 2010 11:02