முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் பெண்கள்!

Friday, 05 April 2013 07:02 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print
தினமணி      05.04.2013

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் பெண்கள்!


பெண்கள் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி வியாழக்கிழமை பேசினார்.

திருப்பூர் "சேவ்' அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் திருப்பூர் வட்டார மகளிர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் "தொழில் வளம் பெருக்குவதில் மகளிர் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், மகளிர் குழுக்களுக்கு பரிசு வழங்கி மேயர் அ.விசாலாட்சி பேசியது:

மனித சமுதாயத்தின் ஆதாரமாக விளங்கிய பெண் சமுதாயம், இடைப்பட்ட காலத்தில் படிப்படியாக தனது நிலையை இழந்து சமுதாயத்தில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது பெண்கள் தன் உரிமையை உணர்ந்து திறமையை நிலைநாட்டி வருகின்றனர்.

ஆட்டோ முதல் விமானம் ஓட்டுவது வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

தொழில் முனைவோர்களாக, அரசியலை வழிநடத்துபவர்களாக பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

சேவ் அமைப்பின் இயக்குநர் ஆ.அலோசியஸ்:

பெண்கள் வீட்டில் மட்டுமல்லாமல் அரசியலிலும், சமூக அநீதிகளிலும் சரியான மாற்றங்கள் நிகழ்வதில் முக்கிய பங்கு வகிப்பது பாராட்டுக்குரியது. பெண்களின் உரிமை மறுக்கப்படும்போதெல்லாம், தெருவுக்கு வந்து போராடுவோம் என்ற பெண்களின் மன எழுச்சி வரவேற்கத்தக்கது என்றார்.

கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூலமாக 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2013 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 1,148 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22.52 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூலமாக 463 குழுக்களில் உள்ள 3 ஆயிரத்து 745 பேருக்கு ரூ.8.36 கோடி மதிப்பில் சுழல் நிதி, நேரடி மற்றும் பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சேவ் அமைப்பு மூலமாக 91 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.15 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஸ்ரீராம்:

97 சதவீத பெண்கள் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தி வருவதால், மகளிர் குழுக்களுக்கு கூடுதல் கடன் வழங்க வங்கிகள் முடிவு செய்துள்ளது. தொழில் வருவாயில் இருந்து ஒரு பகுதியை பெண்கள் சேமிக்க வேண்டும் என்றார்.

முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால்:

வீட்டுக்கு குறைந்தது ஒருவருக்காவது வங்கி சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும். அரசின் அனைத்து பணப் பயன்களும் வங்கிக் கணக்கு மூலமாக வந்தடைகிறது என்றார்.

கடன் ஆலோசகர் பி.குப்புசாமி, ரோஸ்லின் தங்கம், கூட்டமைப்பு பொறுப்பாளர் தனலட்சுமி உள்பட 2,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.