தகுதியிழந்த பெண் கவுன்சிலருக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஆதரவு

Thursday, 02 December 2010 07:30 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமலர்              02.12.2010

தகுதியிழந்த பெண் கவுன்சிலருக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஆதரவு

சென்னை : தொடர்ந்து நான்கு மாநகராட்சிக் கூட்டங்களில் பங்கேற்காத காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தகுதியிழந்ததால், மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் கவுன்சிலராக்கப்பட்டார். சென்னை மாநகராட்சி 107வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ருக்மணி நாராயணன். இவர் தன் மகள் பிரசவத்திற்காக அமெரிக்காக சென்று வந்தார். அமெரிக்கா சென்ற பின், ருக்மணியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் உடனடியாக சென்னைக்கு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை நடந்த நான்கு கூட்டங்களில் ருக்மணி பங்கேற்கவில்லை. ஒரு கவுன்சிலர் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால், மாநகராட்சி சட்ட விதிப்படி கவுன்சிலராக இருக்கும் தகுதியை இழந்தவர் ஆவார். அந்த வகையில், கவுன்சிலர் தகுதி இழந்த ருக்மணி நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, வெளியே நிறுத்தப்பட்டார். கூட்டத்தில், ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி ஆகியோர் அமெரிக்காவிற்கு சென்ற ருக்மணி நாராயணனுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி, அவரை மீண்டும் கவுன்சிலராக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து மேயர் சுப்ரமணியன், ருக்மணியின் தகுதியிழப்பை ரத்து செய்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். பின், ருக்மணி நாராயணன் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டார்.