உள்ளாட்சி தினவிழா 22 மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி

Tuesday, 02 November 2010 10:41 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமணி                 02.11.2010

உள்ளாட்சி தினவிழா 22 மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி

திருப்பூர், நவ. 1: உள்ளாட்சி தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் 22 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தினவிழா திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.

துணைமேயர் கே.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி வரவேற்றார்.

உள்ளாட்சி தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு புதிய சீருடைகளும், பாதாள சாக்கடைத் திட்ட பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

சுவர்ண ஜெயந்தி சகாரி ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சிகள் பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 22 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5.46 லட்சமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவுத் திட்டத்தின் கீழ் 320 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 16.83 லட்சம் மகப்பேறு நிதியுதவியும் வழங்கப்பட்டது. அவற்றை மேயர் க.செல்வராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழாவில், மன்றக்குழுத் தலைவர்கள் சா.பழனிசாமி, வி.ராதாகிருஷ்ணன், ஜி.ஈஸ்வரமூர்த்தி, பி.ஆர்.நடராஜன், எம்.ராதாமணி, எஸ்.சாந்தாமணி, எம்..கலிலூர்ரகுமான், சு.சிவபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநகர பொறியாளர் கே.கௌதமன் நன்றி கூறினார்.

முன்னதாக, திருப்பூர் மாநகராட்சியில் இருந்து துவங்கிய உள்ளாட்சி தினப் பேரணி பார்க் சாலை வழியாக ஜெய்வாபாய் மாநகராட்சிப் பள்ளியை அடைந்தது. இதில், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.