'மகளிர் குழுக்களுக்கு ரூ. 61 கோடி கடன் வழங்கத் திட்டம்'

Monday, 27 July 2009 09:23 administrator நாளிதழ்௧ள் - ம௧ளிர் நலம் / மேம்பாடு
Print

தினமணி 27.07.2009

'மகளிர் குழுக்களுக்கு ரூ. 61 கோடி கடன் வழங்கத் திட்டம்'

நாகப்பட்டினம், ஜூலை 26: நாகை மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களுக்கு நிகழாண்டில் ரூ. 61 கோடி மதிப்பில் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன்.

நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வங்கியாளர்கள் கலந்தாய்வு மற்றும் மகளிர் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் பேசியது:

நாகை மாவட்டத்தில் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம் நிகழாண்டில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், நகர்ப்புற பெண்கள் சுய உதவிக் குழுத் திட்டம், திறன் பயிற்சித் திட்டம், நகர்ப்புற கூலி வேலைவாய்ப்புத் திட்டம், நகர்ப்புற சமுதாயக் கூட்டமைப்புத் திட்டம் என 5 திட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது.

2009-10-ம் ஆண்டில் மகளிர் குழுக்களுக்கு ரூ. 45 கோடி வங்கிக் கடன் வழங்கவும், மகளிர் திட்டம் சாராத சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 16 கோடி கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் கிராமப்புறங்களில் 900 சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 400 சுய உதவிக் குழுக்களும் புதிதாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் முனியநாதன்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் எஸ். நாமகிரி, மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் எஸ். சூர்யகலா, ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ஜி. மோகன், முன்னோடி வங்கி மேலாளர் தணிகாசலம் மற்றும் வங்கியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 27 July 2009 09:24