கூட்டுக் குடிநீர் திட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் ஆய்வு

Monday, 12 April 2010 09:56 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 12.04.2010

கூட்டுக் குடிநீர் திட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் ஆய்வு

தக்கலை, ஏப். 11: பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி பத்மநாபபுரம் நகராட்சி, திருவிதாங்கோடு, முளகுமூடு, வாழ்வச்சகோஷ்டம், காட்டாத்துறை, ஏற்றக்கோடு பேரூராட்சிகள், மருதூர்குறிச்சி, சடையமங்கலம், முள்ளங்கனாவிளை, நட்டாலம், முத்தலக்குறிச்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட 20 வழியோரக் கிராமங்கள் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது.

பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் மருந்துக்கோட்டையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்து.

இதையடுத்து, மருதூர்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட வாழ்வச்ச கோஷ்டம் கிராமப் பகுதியில் உள்ள நான்கரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் சவரிமுத்து தலைமையில், நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

இப் பகுதியில் உள்ள நான்கரை ஏக்கர் நிலத்தில் 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தைத் தேர்ந்தெடுத்து ஆட்சியரின் ஒப்புதலைப் பெற்று பின்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு தயாரித்து முழுவடிவில் அரசுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சந்திரசேகர் மற்றும் உதவியாளர் மில்டன், அலுவலர்கள் ஆகியோர் உடன் சென்றனர்