வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவதில் விழிப்புணர்வு தேவை

Wednesday, 07 April 2010 09:33 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 07.04.2010

வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவதில் விழிப்புணர்வு தேவை

மதுரை, ஏப். 6: வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி செய்து அதைப் பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற "தண்ணீர் மேலாண்மை' குறித்த சிறப்புக் கருத்தரங்கில் தியாகராஜர் கல்லூரிப் பேராசிரியர் சந்திரன் பேசியது:

தமிழகத்தின் மழையளவு ஆண்டுக்கு சராசரியாக 820 மில்லி மீட்டராக உள்ளது. மதுரை மாவட்டத்தில் இது 850 மில்லி மீட்டராக உள்ளது. மாநிலத்தை ஒப்பிடும்போது மதுரையில் மழையளவு குறிப்பிடும்படியாகவே உள்ளது.

தமிழகத்தில் 1980}ம் ஆண்டில் 39 ஆயிரம் கண்மாய்கள் இருந்தன. மாசுபடும் திறன் குறைவாக இருந்ததால் அப்போது தண்ணீரின் தரமும் நன்றாகவே இருந்தது. ஆனால், தற்போது நிலத்தடி நீர் மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது.

மதுரையைப் பொறுத்தவரை வைகை மற்றும் மழையை நம்பியே நிலத்தடி நீர் உள்ளது. மதுரையில் 24 பிரதானக் கண்மாய்கள் இருந்த நிலையில், தற்போது 18 கண்மாய்கள் மட்டுமே உள்ளன.

இதில் மாடக்குளம், தென்கால், வண்டியூர், நிலையூர், குன்னத்தூர் ஆகிய கண்மாய்கள் மட்டுமே வலுவான நிலையில் உள்ளன. கண்மாய்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டால்தான், நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

அதேபோல், வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவது தொடர்பாகவும், அதிக விழிப்புணர்வு வேண்டும். தற்போது சென்னை போன்ற நகரங்களில் வீடுகள் கட்டும்போது வீணாகும் தண்ணீரை தேக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் அகிலன் பேசுகையில், தண்ணீர் மாசுபடுவது தற்போது அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் புளோரைடு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களைப் பல்வேறு நோய்கள் தாக்கக்கூடும். மதுரையின் நிலத்தடி நீரின் தரமும் மிகவும் குறைவாக உள்ளது. இருக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Last Updated on Wednesday, 07 April 2010 09:34