கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணி: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Wednesday, 17 March 2010 10:43 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 17.03.2010

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணி: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

விழுப்புரம், மார்ச் 16: விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி ரூ.35 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்து விரைவில் முடிய நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பாதாள சாக்கடைப் பணிகளால் தெருக்களிலும், சாலைகளிலும் தோண்டப்படும் பள்ளங்கள் நீண்ட நாள்களாக பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் உடனுக்குடன் பள்ளங்களை மூடிவிட உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிக்க கா.குப்பத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் 90 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் கட்டும் பணியையும், எருமணந்தாங்கலில் 3.50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிகளையும் நகர்மன்றத் தலைவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது: கா.குப்பம் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி 10 மாதங்களில் நிறைவுபெற திட்டமிடப்பட்டது. இதனை 9 மாதங்களிலேயே முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்மீது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பின்னர் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் கனகராஜ், சென்னை சுப்பையா கட்டுமான நிறுவன மேலாளர்கள் மதன், கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்

Last Updated on Wednesday, 17 March 2010 10:44