மார்ச் இறுதியில் சென்னைக்கு 'கடல் குடிநீர்' கிடைக்கும்: மு.க.ஸ்டாலின் தகவல்

Wednesday, 24 February 2010 10:42 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 24.02.2010

மார்ச் இறுதியில் சென்னைக்கு 'கடல் குடிநீர்' கிடைக்கும்: மு..ஸ்டாலின் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி கிராமத்தில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார் துணை முதல்வர் மு.. ஸ்டாலின்.

காஞ்சிபுரம், பிப். 23: மீஞ்சூரில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தில் வரும் மார்ச் இறுதியில் சென்னைக்கு குடிநீர் வழங்கப்படும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து துணை முதல்வர் மு..ஸ்டாலின் பேசியது: கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டே ஒப்புதல் அளித்தது.

ஆனால் அதிமுக அரசு அத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. மீஞ்சூர் குடிநீர் திட்டப் பணிகள் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்றாலும், அதனை திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு திட்டத்தை செயல்படுத்த விரைவுப்படுத்தியது.

தற்போது அங்கு 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. வரும் மார்ச் இறுதியில் மீஞ்சூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் கிடைக்கும். கடந்த 2008-ல் இத் திட்டம் முடிவடைய வேண்டும்.

ஆனால் கடல் சீற்றம் மற்றும் தொழில் நுட்ப பிரச்னை போன்றவைகள் தாமதத்துக்கு காரணமாக அமைந்துவிட்டன.

அதேபோல் நெம்மேலி கிராமத்தில் மேலும் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலி மற்றும் கிருஷ்ணன் காரணை கிராமத்தில் 40.05 ஏக்கர் பரப்பளவு நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலம் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பாரமரிக்கப்பட்டு வரும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலமாகும்.

இதை 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,12,500-க்கு குத்தகைத் தொகையாக சென்னை குடிநீர் வாரியம் எடுத்துக் கொண்டது.

இத் திட்டம் அமைக்க மத்திய அரசு ரூ.908.28 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்து அதில் ரூ.871.24 கோடி மானியமாக அளிக்க கடந்த 02-01-2009 அன்று ஆணை வழங்கியது.

2009-10-க்கான மானிய ஒதுக்கீடான ரூ.300 கோடியையும் தமிழக அரசுக்கு மார்ச் 2009-ல் வழங்கியது. நெம்மேலியில் தொடங்கப்பட்ட இத் திட்டம் வரும் 30-11-2011-ல் முடிவடையும் என்றார்.

நெம்மேலி குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கேளம்பாக்கம், திருவான்மியூர், பள்ளிப்பட்டு மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்று சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந் நிகழ்ச்சிக்கு தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதித்துறைச் செயலர் கே.ஞானதேசிகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சிவதாஸ் மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:43