கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் அடுத்த மாதம் முடியும்

Friday, 12 February 2010 07:26 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமலர் 12.02.2010

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் அடுத்த மாதம் முடியும்

மதுரை : மதுரை அவனியாபுரம் மற்றும் சக்கிமங்கலத்தில் நடக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் அடுத்த மாதம் முடியும், என எதிர் பார்க்கப்படுகிறது.

மதுரையில் உள்ள 72 வார்டுகளில், 1 முதல் 21 வரை வைகை ஆற்றின் வடகரையிலும், 22 முதல் 72 வரை தெற்கு கரையிலும் அமைந்துள்ளன. மாநகராட்சி மொத்த பரப்பளவு 51.96 சதுர கி.மீ., 2001 கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 9 லட்சத்து 28 ஆயிரத்து 869. வடக்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க சக்கிமங்கலத்திலும் தெற்கு பகுதியில் வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க அவனியாபுரத்திலும் பண்ணைகள் உள்ளன. அவனியாபுரம் பண்ணை 380 ஏக்கர் பரப்பிலும், சக்கிமங்கலம் பண்ணை 135.95 ஏக்கர் பரப்பிலும் அமைந் துள்ளன.

தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கழிவுநீர் பண்ணைகளில் சுத்திகரிப்பு அமைப்புகள் போதுமானதாக இல்லை. எனவே, அவனியாபுரத்தில் ஒரு நாளைக்கு 125 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி.,) கழிவு நீரையும், சக்கிமங்கலத்தில் 45.7 எம்.எல்.டி., கழிவு நீரையும் சுத்தப்படுத்தும் நிலையம் கட்டப்படுகிறது.

இதற்காக அவனியாபுரத்தில் 76.08 கோடி ரூபாய் செலவிலும், சக்கிமங்கலத்தில் 36.50 கோடி ரூபாய் செலவிலும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைகிறது. இக்கட்டுமான பணிகள், அடுத்த மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இப்பணிகளை தலைமை செயலர் ஸ்ரீபதி பார்வையிட்டார். மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல், பொறியாளர்கள் விஜயகுமார், மதுரம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், ஆர்.பாஸ்கரன் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 12 February 2010 07:28