சுத்திகரிப்பு மையங்களுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு

Tuesday, 14 July 2009 13:20 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print
தினமணி 14.07.2009
சுத்திகரிப்பு மையங்களுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு
சென்னை, ஜூலை 13: ""பெருமளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்னணு ஊடகங்களின் துறையை ஊக்குவிக்க, பொழுதுபோக்கு மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்'' என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

""மின்னணு ஊடகங்களின் இப்போதைய வளர்ச்சி, திரைப்படங்கள் உருவாக்குவதல், தொகுத்தல் தொடர்பான பயிற்சி அளித்தல், "அனிமேஷன்' படம் எடுத்தல் ஆகிய பிரிவுகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ""பொழுதுபோக்கு மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பூங்கா'' ஒன்று தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும்.
மின்வெட்டில் இருந்து... தோல் மற்றும் ஜவுளி தொழில்களுக்காக அமைக்கப்படும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மையங்களுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையிலும், வருவாயை அதிகரிக்கும் பொருட்டும், கரூர் அருகே புகளூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஆலையில் உள்ள நீராவி மற்றும் மின் உற்பத்தி அமைப்புகள் ரூ. 135 கோடியில் புதுப்பிக்கப்படும். வேலைவாய்ப்பு உருவாக்கம், சுற்றுச்சூழல் நேயம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் தொழிற்சாலைகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

இதன்மூலம், தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்க முடியும். சர்க்கரை, தோல், ரசாயனம், மற்றும் பல முக்கிய துறைகளுக்கான துறை சார்ந்த கொள்கைகள் உருவாக்கப்படும்.

குப்பைக் காகிதத்தில் இருந்து, மரக்கூழ் தயாரிக்கக் கூடிய, நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட மைநீக்கி ஆலை ரூ. 174 கோடி செலவில் அமைக்கப்படும்'' என்றார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Last Updated on Tuesday, 14 July 2009 13:52