கழிவுநீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம்: மாணவர்கள் சாதனை

Thursday, 29 January 2015 07:27 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print
தினமலர்        29.01.2015

கழிவுநீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம்: மாணவர்கள் சாதனை

தேவதானப்பட்டி : வீடு, ஓட்டல் , பள்ளி, கல்லூரி கேன்டீன்களில் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை தேனி மாவட்டம், பெரியகுளம்-தேவதானப்பட்டி அருகேயுள்ள வி.பி.வி., பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தண்ணீர் பிரச்னை என்பது நாட்டில் தீர்க்கப்படாத பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற நீரை பாதுகாக்கின்ற மனநிலை பொதுமக்களிடம் இல்லை. இதனால் நாள்தோறும் பல ஆயிரம் மில்லியன் குடிநீர் வீணாகி கழிவு நீரில் கலக்கிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள், குட்டைகள் அனைத்திலும் கழிவு நீர் கலந்து நீலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.இந்நிலையில் வி.பி.வி., பொறியியல் கல்லூரி தலைவர் ஆடிட்டர் பாண்டியன் மாணவர்களின் படிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி வருகிறார். கல்லூரியின் செயல் இயக்குனர் வினோத் தலைமையில், கட்டடத்துறை தலைவர் ஜெகன், ஆய்வக உதவியாளர் சந்திரசேகர், கட்டடத்துறை இறுதியாண்டு மாணவர்கள் விக்னேஷ்வரன், விக்னேஷ்குமார், ரவிபாரத், சுந்தர் ஆகியோர் இணைந்து கழிவு நீர்சுத்திரிப்பு முறை என்ற திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தி வெற்றிகண்டுள்ளனர். இந்த நீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்து மறுசுழற்சி முறையில் மீண்டும் நீரை பயன்படுத்த சான்று பெற்றுள்ளனர். இக்கல்லூரியில் எளிய முறையில் செலவில்லாமல் வீடுகள், ஓட்டல்கள், பள்ளி, கல்லூரி கேன்டீன்களில் வீணாகும் நீரை எவ்வாறு மறு சுழற்சியில் நீரை சுத்தம் செய்வது என்று மாதிரி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

சுத்தம் செய்வது எப்படி: நிலத்தின் மேலே உள்ள கலங்கலான நீர் நிலத்திற்கு அடியில் பல அடுக்குகளை கடந்து எப்படி தூய நிலத்தடி நீராக மாறுகிறதோ, இதை மூலமாக வைத்து உருவாக்கப்பட்டது தான் மறுசுழற்சி முறை. முதல் அடுக்கில் மணல் மூலம் கழிவு நீரில் உள்ள அசுத்தமுள்ள பொருட்கள் படியவைக்கப்படுகிறது. இரண்டு, மூன்றாவது அடுக்கில் செங்கல், ஜல்லிக்கற்கள் மூலம் தேவையற்ற உப்பு தாதுக்களையும், நச்சுத்தன்மைகளையும் நீக்குகிறது. கழிவு நீரில் உள்ள பாக்டீரியா, எண்ணெய் பசை மற்றும் துர்நாற்றத்தை போக்குவதற்கு கல்வாழை செடி பயன்படுத்தப்படுகிறது. மேலும் பிளீச்சிங் பவுடர் பயன்படுத்துகின்றனர். இந்த மூன்றடுக்கு முறையில் இக்கல்லூரியில் உள்ள கேன்டீனில் நாள்தோறும் பயன்படுத்தப்படும் 500 லிட்டர் நீரை மறு சுழற்சி முறையில் சுத்தம் செய்கின்றனர். இதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட 400 லிட்டர் நீர் கிடைக்கிறது. இந்த நீரை கல்லூரி வளாகங்களில் உள்ள மரங்ள், பூச்செடிகளுக்கும், வாகனங்களை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர்.

செயல்இயக்குனர் வினோத் கூறியதாவது: தற்போது நிலவிவரும் தண்ணீர் பிரச்னைக்கு இந்த முறை ஒரு நல்ல நீர்வாக அமையும். இந்த நீரை விவசாயப் பயன்பாட்டிற்கும், கட்டடப்பயன்பாடு, வானங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். நீரில் பிளீச்சிங் பவுடர் கலந்து குடியிருப்பு, அலுவலங்கள், தொழிற்சாலைகளில் தரைகளை துடைப்பதற்கும், கிராமங்களில் உள்ள சிறிய அளவிலான குளம், குட்டைகளில் கழிவு நீரைத் தேக்கி வைத்து மறு சுழற்சி முறையில் விவாயத்திற்கும் பயன்படுத்தலாம். அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் கட்டடத்துறை மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மூலம் எங்கள் கல்லூரியை மையப்படுத்தி உள்ள கிராமங்களில் வீடுகளில் மறுசுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்த கற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். இதன் மூலம் கழிவு நீரால் ஏற்படும் பிரச்னைகளுக்கும், தண்ணீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தற்போது இந்த நீரை குடிநீராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம், என்றார்.

இவருடன் பேச: 81100 06600.