கழிவுநீரை சுத்தம் செய்யும் திட்டம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு நகராட்சி சேர்மன் தகவல்

Wednesday, 22 May 2013 10:33 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print
தினமலர்       22.05.2013

கழிவுநீரை சுத்தம் செய்யும் திட்டம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு நகராட்சி சேர்மன் தகவல்


திருச்செங்கோடு: ""கழிவுநீரை சுத்தம் செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில், கழிவுநீர் மேலாண் திட்டத்தில், 150 கோடி ரூபாய் மதிப்பில், கருத்துரு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என, கவுன்சில் கூட்டத்தில், நகராட்சி சேர்மன் சரஸ்வதி கூறினார்.

திருச்செங்கோடு நகராட்சி கவுன்சில் கூட்டம், அதன் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் சரஸ்வதி தலைமை வகித்தார். கமிஷனர் (பொறுப்பு) ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

நகராட்சியில் குடிநீர் அபிவிருத்திக்காக, 7.50 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட, 33 வார்டுகளிலும், வறட்சியை கருத்தில் கொண்டு, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்த, நகராட்சி சேர்மன் சரஸ்வதிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:

சக்திவேல் (அ.தி.மு.க.,): கூட்டப்பள்ளி ஏரியை தூர்வாரினால், மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்க ஏதுவாக இருக்கும்.

கார்த்திகேயன் (அ.தி.மு.க.,): குடிநீர் குழாய்களில் பழுது ஏற்பட்டால் சரிசெய்ய பணியாளர்கள் வருவதில்லை. புதிய இணைப்புகள் கொடுக்க ஆர்வமாக வரும் பணியாளர்கள், பழுது நீக்கம் செய்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

சரஸ்வதி (சேர்மன்): உடனடியாக பழுதுகள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவி (அ.தி.மு.க.,): கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேர்மன்: அடுத்த கூட்டத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்படும். புதுடில்லி மாநகராட்சி பகுதிகளில், பாதள சாக்கடை திட்டத்தின் மூலம், கழிநீரை எவ்வாறு அகற்றுகின்றனர், அவற்றை எப்படி சுத்தம் செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர் என்பதை நேரில் சென்று பார்வையிட்டோம்.

அந்த சிறப்பான திட்டத்தை, திருச்செங்கோட்டிலும் கழிவுநீர் மேலாண் திட்டத்தில் செயல்படுத்த, 150 கோடி ரூபாய்க்கு கருத்துரு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிபாளையம் சாலையில் உள்ள வாரச்சந்தையில், 20 கோடி ரூபாய் மதிப்பில், வணிக வளாகம், தினசரி மார்கெட்டில், 12.50 கோடி ரூபாயில் கடை மற்றும் வணிக வளாகம் கட்டவும், கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.