கழிவுநீர் சுத்திகரிப்பை பரவலாக்கும் திட்டம் குறித்து ஆலோசனை

Sunday, 20 September 2009 06:44 administrator நாளிதழ்௧ள் - நீர் சுத்தி௧ரிப்பு
Print

தினமணி 20.09.2009

கழிவுநீர் சுத்திகரிப்பை பரவலாக்கும் திட்டம் குறித்து ஆலோசனை

திருச்சி, செப். 19: மத்திய அரசின் கழிவுநீர் சுத்திகரிப்பதை பரவலாக்கும் திட்டம் முன்மாதிரியாக திருச்சி மாநகராட்சியில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சியில் ஆலோசனை மேற்கொண்டது.

திருச்சி மாநகரில் உருவாகும் கழிவுநீர், புதைச் சாக்கடைத் திட்டத்தின் மூலம் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது.

பொதுவாக நகரங்களின் மக்கள்தொகைப் பெருக்கத்துடன் ஒப்பிடுகையில், ஒரே இடத்தில் சுத்திகரிப்பு செய்து அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்தச் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கழிவுநீர் சுத்திகரிப்பை பரவலாக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

இதற்கான திட்ட வரைவைத் தயாரிக்க சென்னை ஐஐடி (தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) கட்டடப் பொறியியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முன்மாதிரியாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாட்டில் திருச்சி மாநகராட்சியும், ஆந்திரத்தில் குண்டூர் மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பேராசிரியர்கள் பி.எஸ். மூர்த்தி, லிக்கி பிலிப், இந்துமதி ஆகியோரைக் கொண்ட இந்தக் குழுவினர், வெள்ளிக்கிழமை திருச்சி வந்தனர். மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து சனிக்கிழமை காவேரி மகளிர் கல்லூரியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மேயர் எஸ். சுஜாதா, ஆணையர் த.தி. பால்சாமி, கல்லூரியின் செயலர் ரங்கராஜன், தலைவர் எம். ஜெயராமன், முதல்வர் சுஜாதா, முன்னாள் அமைச்சர் என். நல்லுசாமி, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.